தனி விமானம் மூலம் நாடு திரும்பிய இந்தியர்கள்

2 mins read

புதுடெல்லி: புதுவகை கொரோனா கிருமித்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட சீனாவின் ஹுபெய் மாநிலம், வூஹான் நகரில் இருந்து இந்தியர்கள் 324 பேர் தனி விமானம் மூலமாக நேற்றுக் காலை 7.30 மணியளவில் டெல்லி இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தைச் சென்றடைந்தனர். அங்கு அவர்கள் அனைவரும் தேவையான மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

அந்த 'ஏர் இந்தியா ஜம்போ பி747' விமானத்தில் வந்தவர்களில் 211 பேர் மாணவர்கள், 110 பேர் வூஹானில் வேலை செய்பவர்கள், சிறார் மூவர் எனத் தெரிவிக்கப்பட்டது.

டெல்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் ஐவர் அந்தச் சிறப்பு விமானத்தில் சீனா சென்று திரும்பினர்.

வூஹானில் இருந்து திரும்பிய 324 பேரும் நலமுடன் இருப்பதாக இந்திய சுகாதார அமைச்சு தெரிவித்தது. மருத்துவ முகாம்களில் அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடந்து வருவதாகவும் அமைச்சு குறிப்பிட்டது.

அவர்களில் 224 பேர் மனேசரில் உள்ள இந்திய ராணுவத்தின் தனிமைப்படுத்தப்படும் முகாமிற்கும் எஞ்சிய 104 பேரும் இந்திய-திபெத்திய எல்லை போலிஸ் படையின் சாவ்லா முகாமிற்கும் கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, உடல் வெப்பநிலை அதிகமாக இருந்த காரணத்தால் இந்தியர்கள் அறுவரை விமானத்தில் ஏற சீன அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என்றும் அவர்கள் வூஹானிலேயே தடுத்து வைக்கப்பட்டனர் என்றும் சக பயணி ஒருவர் கூறியதாக 'ஏஎன்ஐ' செய்தி வெளியிட்டுள்ளது.

இதனிடையே, இந்திய நேரப்படி நேற்று பிற்பகல் 12.50 மணிக்கு இரண்டாவது விமானம் வூஹானுக்குப் புறப்பட்டுச் சென்றது.

முதல் விமானத்தில் பயணம் செய்த அதே மருத்துவர்களே இரண்டாவது விமானத்திலும் சென்றனர்.