புதுடெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று நாடாளு மன்றத்தில் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார்.
2020-2021ஆம் ஆண்டுக்கான இந்த அறிக்கையில் வருமான வரி குறைப்பு உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 10 விழுக்காடு வளர்ச்சியடையும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அதே வேளையில் தமிழகத்தில் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைப்பதாக அறிவித்துவிட்டு மத்திய அரசு கீழடியை புறக்கணித்து விட்டதாக தமிழக எம்பிக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
நாட்டின் ஐந்து பகுதிகளில் தொல்லியல்துறை சார்பில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று குறிப்பிட்ட நிதியமைச்சர், தமிழகத்தில் ஆதிச்சநல்லூர் பகுதி அவற்றுள் ஒன்று என்றார். இதைய டுத்து கீழடியை மத்திய அரசு புறக்கணிப்பதாக தமிழக எம்பிக்கள் அவையில் முழக்கமிட்டனர்.
ஆதிச்சநல்லூர் தொல்லியல் களத்துக்கு அடுத்து இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால் தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் பெரிய அளவிலான அகழாய்வு கீழடியே ஆகும்.
புதிய வருமான வரி திட்டத்தை அறிமுகம் செய்த அமைச்சர், அத்திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை சம்பாதிப்பவர்க ளுக்கு முழு வரிவிலக்கு அளிக்கப்படுவதாக குறிப்பிட்டார்.
வருமான வரிவிதிப்பில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களால் மத்திய அரசுக்கு சுமார் 40,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்றும் சுட்டிக்காட்டிய அவர், ஜிஎஸ்டியின் கீழ் 60 லட்சம் பேர் புதிதாக வருமான வரி செலுத்தி உள்ளதாகத் தெரிவித்தார்.
2022க்குள் இந்திய விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் என்று தெரிவித்த நிர்மலா சீதாராமன், 2020-2021 நிதியாண்டில், விவசாயத்துறைக்கு 2.83 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தார். இதில், விவசாயிகளின் நலனுக்காக 16 அம்ச திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
கல்வித்துறைக்கு ரூ.99,300 கோடி, சுகாதாரத்துறைக்கு ரூ.69,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை - பெங்களூரு இடையே மற்றும் டெல்லி - மும்பை இடையே வர்த்தக வழித்தடங்கள் உருவாக்கப்படும் என்றும், 2024க்குள் நாடு முழுவதும் 100 விமான நிலையங்கள் உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

