இசைமழையில் பொழிந்த பணமழை

இசைமழையில் பொழிந்த பணமழை

1 mins read
d67e007c-caf1-464c-afc4-19b384b461b7
சனிக்கிழமை அள்ளிவீசப்பட்ட பணத்தின் மதிப்பு பத்து லட்சம் ரூபாய் வரை இருக்கும் என கூறப்பட்டது. படம்: சமூக ஊடகம் -

நவ்சாரி: பக்தி கீதங்களைப் பாடிய கீதா ராபரி என்ற பாடகி மீது பக்தர்கள் பணமழை பொழிவதும் அந்தக் காணொளி வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களில் பரவுவதும் வாடிக்கை.

நேற்று முன்தினமும் அதேபோன்றதொரு சம்பவம் குஜராத் மாநிலம் நவ்சாரியில் நடந்தது. இசைமழை பொழிந்த கீதா ராபரி மீது பத்து ரூபாய் தாள் முதல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வரை பணமழை பொழிந்தது. ரூபாய் நோட்டுகளை அவர் மீது ஏராளமானோர் தூவி மகிழ்ந்தனர்.

அங்கிருந்த சிறுவர்கள் மூலம் பாடகியின் உதவியாளர்கள் வாளிகளில் கத்தை கத்தையாக பணத்தை அள்ளிச் சென்றனர். பணம் எண்ணும் இயந்திரம் மூலம் நோட்டுகள் எண்ணப்பட்டதில் பத்து லட்சம் ரூபாய் வரை இருந்ததாக விழா ஏற்பாட்டாளர்கள் கூறினர். இந்திய ரூபாய் நோட்டுகளுடன் அமெரிக்க டாலர்களும் ஏராளமான அளவில் பாடகி மீது வீசப்பட்டன. வெளிநாடு வாழ் இந்தியர்கள் பலரும் விழாவில் பங்கேற்று பணமழை பொழிந்தனர். இது போல பாடகர்களைக் கௌரவிப்பது குஜராத்தியர் மரபு என்றனர் ஏற்பாட்டாளர்கள்.

பக்திப் பாடல் நிகழ்ச்சி மூலம் திரண்ட இந்தப் பணம் முழுவதும் ஏழைக் குழந்தைகளின் கல்விக்கும் வசதியற்ற குடும்பங்களைச் சேர்ந்த இளம்பெண்களின் திருமணத்திற்கும் கொடுத்து உதவப்படும் என ஏற்பாட்டாளர் விஜய் பாபு கூறினார்.

பாடகி மீது சிறுவர், பெண்கள் என பலரும் பணத்தாள் தூவும் காணொளி பரவி வருகிறது.