டெல்லியில் மீண்டும் துப்பாக்கிச் சத்தம்

டெல்லியில் மீண்டும் துப்பாக்கிச் சத்தம்

2 mins read

புதுடெல்லி: டெல்லியில் மேலும் ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் மூன்று முறை துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக ஜாமியா நகரில் உள்ள ஷாகீன் பாக் பகுதியில் கடந்த டிசம்பர் 15ஆம் தேதியில் இருந்து ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு மேடை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜனவரி 30ஆம் தேதி, டெல்லியில் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் பேரணியாகச் சென்ற போது, 17 வயதான ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் மாணவர் ஒருவர் காயமடைந்தார்.

இதையடுத்து, ஜாமியா பல்கலைக்கழகத்தின் ஐந்தாவது நுழைவாயில் அமைந்துள்ள பகுதியில், இரு மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர். இதே போல் மற்றொரு நுழைவாயில் பகுதியிலும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இரவு நேரத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஒரு வாரத்துக்குள் மூன்று முறை துப்பாக்கிச்சூடு நடந்திருப்பது டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என போராட்டக்காரர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அப்பகுதி காவல் நிலையத்தை அவர்கள் முற்றுகையிட்டனர். எனினும் புகார் அளித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக போலிசார் தெரிவித்ததை அடுத்து, போராட்டக்காரர்கள் புகார் அளித்தனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இத்தகைய அச்சுறுத்தல் காரணமாக போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்றும் அவர்கள் கூறினர்.