பினராயி: பிளவை ஏற்படுத்தும் சட்டத்திருத்தம்

பினராயி: பிளவை ஏற்படுத்தும் சட்டத்திருத்தம்

1 mins read
4c747a96-5d00-448a-afa8-b2cf09c9363d
இந்தியாவின் மதச்சார்பின்மை கட்டமைப்பு ஆட்டம் கண்டு வருகிறது என்பதில் துளியும் சந்தேகம் இல்லை என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். -

மும்பை: இந்தியாவின் மதச்சார்பின்மை கட்டமைப்பு ஆட்டம் கண்டு வருகிறது என்பதில் துளியும் சந்தேகம் இல்லை என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதாகக் குறிப்பிட்டார்.

"ஜனநாயகத்தின் அடித்தளத்தையும் பலவீனப்படுத்த மதவாத சக்திகள் முயல்கின்றன. மதவாத திட்டங்களை மத்திய அரசு தொடர்ந்து திணிக்கும் முயற்சியில் இறங்கி வருகிறது.

"கடைசியாக அது கையில் எடுத்துள்ள ஆயுதம் குடியுரிமை திருத்தச் சட்டமாகும். இந்தச் சட்டமானது நாட்டு மக்களின் மதச்சார்பற்ற சிந்தனையை திசை திருப்பி நமது தேசியவாத இயக்க உணர்வை தூண்டி வருகிறது," என்றார் முதல்வர் பினராயி விஜயன்.

குடியுரிமை திருத்தச் சட்டமானது நாட்டின் அரசியல் அமைப்பு சாசனத்துக்கு முற்றிலும் எதிரானது என்று குறிப்பிட்ட அவர், அச்சட்டத் திருத்தமானது மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தும் வகையிலும், இந்துத்துவா சித்தாந்தத்தை திணிக்கும் வகையிலும் உள்ளது என்றார்.

"எனவேதான் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசியல் அமைப்பு சாசனத்தின்படி இதுபோன்ற தீர்மானத்தை நிறைவேற்ற சட்டப்பேரவைக்கு அதிகாரம் உள்ளது. கேரளாவை அடுத்து, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்க மாநில அரசுகளும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளன.

"எனவே, இச்சட்டத்தை ரத்து செய்ய தொடர்ந்து போராட வேண்டும்," என்றார் பினராயி விஜயன்.