பெங்களூரு: அமைச்சர் பதவி கேட்டு பாஜக எம்எல்ஏக்கள் பலரும் நெருக்கடி கொடுப்பதால் கர்நாடகா முதல்வர் எடியூரப்பா கடும் சிக்கலை எதிர்கொண்டு இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை பத்துக்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் அவரிடம் இக்கோரிக்கையை முன்வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்த பின்னர் எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தது. இச்சமயம் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் பலர் அணி மாறினர்.
இதையடுத்தே அங்கு அண்மையில் நடந்த இடைத்தேர்தலில் கட்சி மாறி வந்த எம்எல்ஏக்கள் 11 பேர் வெற்றி பெற்றனர்.
தேர்தல் பரப்புரையின்போதே இவர்கள் வெற்றி பெற்றால் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்படுவர் என உறுதி அளித்திருந்தார் எடியூரப்பா.
இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் தோல்வி அடைந்த யோகேஷ்வருக்கும் அமைச்சர் பதவி வழங்க எடியூரப்பா முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
இவர் குமாரசாமி ஆட்சியை கவிழ்த்ததில் முக்கிய பங்காற்றியதாகக் கூறப்படுகிறது. இவர் தற்போது எம்எல்ஏவோ, அல்லது மேலவை உறுப்பினரோ அல்ல என்பதை அதிருப்தி எம்எல்ஏக்கள் முதல்வர் எடியூரப்பாவிடம் சுட்டிக்காட்டி உள்ளனர்.
இதற்கிடையே எம்எல்ஏ மகேஷ் குமட்டள்ளி அமைச்சர் பதவி கேட்டு வரும் நிலையில், அவரை வாரியத் தலைவராக நியமிக்க பாஜக மேலிடம் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை.
இந்நிலையில் அதிருப்தி பாஜக எம்எல்ஏக்கள் ரகசிய ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதனால் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வதில் முதல்வர் எடியூரப்பாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் நாளை அமைச்சர்களாகப் பதவி ஏற்க உள்ளனர். இதனால் கர்நாடக பாஜக அதிருப்தி எம்எல்ஏக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு நிலவி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

