கார், லாரி நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 12 பேர் பலி

கார், லாரி நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 12 பேர் பலி

2 mins read

மும்பை: திருமண நிகழ்வில் பங்கேற்றுவிட்டு காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தவர்கள் மீது லாரி மோதியதில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று முன்தினம் இரவு நிகழ்ந்தது.

ஜல்காவ் மாவட்டம் முக்தை தாலுகா சிஞ்சோல் கிராமத்தைச் சேர்ந்த பாலு நாராயண் சவுத்ரி என்பவர், தமது உறவினர் வீட்டு திருமண வைபவத்தில் பங்கேற்பதற்காக குடும்பத்தாருடன் காரில் சென்றார்.

திருமணம் நல்லவிதமாக நடந்து முடிந்ததையடுத்து நேற்று முன்தினம் பாலு நாராயண் அதே காரில் குடும்ப உறுப்பினர்களுடன் ஊர் திரும்பினார். காரில் அவரது அண்டை கிராமத்தைச் சேர்ந்த 5 பேர் கூடுதலாக ஏறிக் கொள்ள, மொத்தம் 17 பேர் பயணம் செய்துள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் பயணம் செய்த கார் யவல் வட்டாட்சியைச் சேர்ந்த ஹிங்கோலா கிராமம் அருகே இரவு 11 மணி அளவில் வந்து கொண்டிருந்தபோதுதான் அந்தப் பயங்கரம் நிகழ்ந்தது. அப்போது எதிரே வேகமாக வந்த லாரி ஒன்று, கார் மீது மோதியது.

இந்தக் கோர விபத்தில் பாலு நாராயண் சவுத்ரி, அவரது மனைவி உள்பட 12 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிாிழந்தனர். மற்ற 5 பேர் படுகாயம் அடைந்து உயிருக்குப் போராடினர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலிசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

லாரி மோதியதில் கார் முற்றிலும் உருக்குலைந்து போனது என்றும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியர்கள் விபத்தில் பலியான சம்பவத்தால் பாலுவின் சொந்த கிராமத்தினரும் திருமணம் நடைபெற்ற கிராமத்தினரும் சோகத்தில் மூழ்கினர்.