புனேயில் வருடத்திற்கு 4,000 பெண்கள் காணாமல்போகின்றனர்

புனேயில் வருடத்திற்கு 4,000 பெண்கள் காணாமல்போகின்றனர்

2 mins read

புதுடெல்லி: இந்தியாவின் புனே மாவட்டத்தில் ஆண்டுக்கு 4,000 பெண்கள் காணாமல் போவதாக போலிசுக்கு வந்துள்ள புகார்கள் மூலம் அறியப்படுகிறது.

தேசிய குற்றவியல் பதிவேடு இலாகா ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.

அதில் மாவட்டம்தோறும் வந்துள்ள புகார்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

அப்போது மும்பைக்கு அடுத்ததாக புனேயில்தான் அதிக எண்ணிக்கையில் பெண்கள் காணாமல் போயிருப்பது தெரிய வந்துள்ளது.

2018ஆம் ஆண்டில் புனே மாவட்டத்தில் 4,149 பெண்கள் காணாமல் போனதாக புகார்கள் வந்துள்ளன.

புனே நகரில் மட்டும் 2,504 பெண்களும் கிராமப் புறங்களிலிருந்து 1,645 பெண்களும் காணாமல் போனதாக புகார்கள் பதிவாகியுள்ளன.

இதற்கு முந்தைய ஆண்டிலும் 4,135 பெண்கள் காணாமல் போனதாக போலிசாருக்கு புகார்கள் வந்துள்ளன.

இதில் புனே நகரில் மட்டும் 2,579 பெண்களும் கிராமப்புறங்களில் 1,645 பெண்களும் காணாமல் போயினர்.

ஆனால் ஆய்வு குறித்து புள்ளி விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

காணாமல்போன பெண்கள் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டார்களா, குடும்பத்துடன் சேர்த்து வைக்கப்பட்டார்களா போன்ற தகவல்கள் தெரியவில்லை.

ஆனால் இந்தியாவிலேயே மகாராஷ்ரா மாநிலத்தில்தான் கடந்த மூன்று ஆண்டுகளில் ஆக அதிகமான பெண்கள் காணாமல் போயுள்ளனர்.

2016ல் 28,316 பெண்களும் 2017ல் 29,279 பெண்களும் 2018ல் 33,964 பெண்களும் காணாமல் போனதாக போலிசுக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று புனே நகர போலிஸ் துறை துணை ஆணையர் பச்சன் சிங் தெரிவித்தார்.

காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்காக 2019ல் சிறப்புப் பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித் தார்.

இந்தப் பிரிவு காணாமல் போனவர்களைப் பற்றிய தகவல்களைச் சேகரித்து விசாரணை நடத்தி வருவதாக திரு பச்சன் சிங் குறிப்பிட்டார்.