கர்நாடகா: கட்சி தாவிய 10 பேருக்கு பதவி

கர்நாடகா: கட்சி தாவிய 10 பேருக்கு பதவி

1 mins read
cd6c5f5a-41a7-42ee-bf0f-41ff984a083a
கர்நாடகாவில் எஸ்.டி.சோமசேகர், ரமேஷ் ஜர்கிகோலி, ஆனந்த் சிங், சுதாகர், பிராத்தி பசவராஜ், சிவராம் ஹெப்பர், பி.சி.பாட்டீல், கே.கோபாலய்யா, கே.சி.நாராயண கவுடா, ஸ்ரீமந்த் பாலாசாகேப் பாட்டீல் ஆகிய 10 பேருக்கு ஆளுநர் வஜுபாய் வாலா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். படம்: ஊடகம் -

பெங்களூரு: கர்நாடகாவில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குமாரசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. அப்போது காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் கொறடா உத்தரவை மீறியதாகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து எடியூரப்பா தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைந்தது.

அதன் பிறகு காலியாக இருந்த 15 இடங்களுக்கு நடந்த இடைத்தேர்தலில் 12 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது.

இதில் ஒருவரைத் தவிர மற்ற 11 பேரும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து பாஜகவுக்குத் தாவியவர்கள். இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் அவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று எடியூரப்பா பிரசாரத்தின்போது உறுதி அளித்திருந்தார்.

அதன்படி நேற்று எடியூரப்பா தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்தார். எஸ்.டி.சோமசேகர், ரமேஷ் ஜர்கிகோலி, ஆனந்த் சிங், சுதாகர், பிராத்தி பசவராஜ், சிவராம் ஹெப்பர், பி.சி.பாட்டீல், கே.கோபாலய்யா, கே.சி.நாராயண கவுடா, ஸ்ரீமந்த் பாலாசாகேப் பாட்டீல் ஆகிய 10 பேர் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆளுநர் மாளிகையில் நடந்த எளிய விழாவில், புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் வஜுபாய் வாலா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இதன்மூலம் 34 பேர் கொண்ட அமைச்சரவையின் பலம், முதல்வர் எடியூரப்பாவுடன் சேர்த்து 28 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 6 இடங்கள் காலியாக உள்ளன.