சென்னை: 2021 சட்டமன்றத் தேர்தலில் கசப்பான கட்சிகளைக் கழற்றிவிட்டுவிட்டு நாம் தமிழர் கட்சியை இணைத்துக்கொள்ள அதிமுக திட்டமிடுவதாக அந்தக் கட்சி நிர்வாகிகள் கூறுகிறார்கள்.
சீமான் இம்மாதம் 6ஆம் தேதி முதல்வர் பழனிசாமியைச் சந்தித்ததை வைத்துப் பார்க்கையில் அதிமுக-நாம் தமிழர் கட்சி கூட்டணிக்கு அதிக வாய்ப்புள்ளதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் கட்சித் தொடங்கி அரசியலில் குதித்தால் ரஜினி அணியில் இருந்து அதிமுக அணி கைவிடப்படலாம் என்றும் அப்படி ஒரு சூழ்நிலை நிகழ்ந்தால் அதிமுக கூட்டணியில் இப்போது இருந்து வரும் பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் அதிமுக அணியில் இருந்து விலகிவிடும் என்றும் அவர்கள் கணிக்கிறார்கள்.
இப்படிப்பட்ட ஒரு சூழலில், நாம் தமிழர் கட்சியைச் சேர்த்துக்கொண்டால் இழந்த பலத்தைப் பெற்றுவிடலாம் என்று அதிமுக கணக்குப் போடுகிறது.
நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ரஜினிகாந்த் ஒருபுறமும், மநீம தலைவர் கமல்ஹாசன் மறுபுறமும் வலம் வரும் போது அவர்களை மேடைக்கு மேடை பதிலடி கொடுத்து சமாளிக்க சீமானால்தான் முடியும் என்று தங்கள் கட்சி தலைமைத்துவம் கருதுவதாக அதிமுகவினர் கூறுகிறார்கள்.

