கெஜ்ரிவால்: எங்கள் வெற்றி டெல்லி மக்களின் வெற்றி

கெஜ்ரிவால்: எங்கள் வெற்றி டெல்லி மக்களின் வெற்றி

2 mins read
92db9b0e-147a-4fe7-a597-a65d9a7f45fc
டெல்லியில் தேர்தல் வெற்றியைக் கொண்டாடிய ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள். படம்: இபிஏ -
multi-img1 of 3

டெல்லியில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது ஆம் ஆத்மி கட்சி.

"இந்த தேர்தல் வெற்றி ஆம் ஆத்மியின் வெற்றி அல்ல; டெல்லி மக்களின் வெற்றி. தொடர்ந்து மூன்றாவது முறையாக எங்களுக்கு வெற்றியைக் கொடுத்த டெல்லி மக்களுக்கு இந்த வெற்றியை அர்ப்பணிக்கிறேன்," என்று தெரிவித்துள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த சனிக்கிழமை தேர்தல் நடைபெற்ற நிலையில், வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை முதல் தொடர்ந்தது.

இன்று மாலை இந்திய நேரம் 4 மணி நேர நிலவரப்படி ஆம் ஆத்மி கட்சி சுமார் 62 இடங்களிலும் பாஜக 8 இடங்களிலும் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தன.

ஆளும் ஆத்மி கட்சி 62 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளதால் மீண்டும் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது. இந்த வெற்றியை அக்கட்சியினர் நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

இந்தத் தேர்தலில் டெல்லி துணை முதல்வரும் ஆம் ஆத்மி மூத்த தலைவருமான மணிஷ் சிசோடியாவும் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், கெஜ்ரிவால் தொண்டர்கள் மத்தியில் பேசிய போது, "டெல்லி மக்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கை வீண் போகாது. தொடர்ந்து மக்களுக்காக உழைப்போம். நாட்டில் புதிய வகையான அரசியல் பிறப்பதற்கு இத்தேர்தல் முடிவுகள் அடித்தளமாக அமையும்," என்றார்.

இந்நிலையில், கெஜ்ரிவாலுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்ட அறிக்கையில், "கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துகள். பாஜகவை மக்கள் நிராகரித்துவிட்டனர். டெல்லியின் வளர்ச்சியே செயல்பட்டுள்ளது," என்றார்.

திமுக தலைவர் ஸ்டாலின் தனது டுவிட்டர் செய்தியில், "மிகப்பெரிய வெற்றியுடன் டெல்லியில் மீண்டும் ஆட்சி அமைக்க உள்ள கெஜ்ரிவால், ஆம் ஆத்மிக்கு வாழ்த்துகள். வகுப்புவாத அரசியலை வளர்ச்சித் திட்டங்கள் தோற்கடிக்கும் என்பதற்கு இது சிறந்த உதாரணம்," என்று தெரிவித்துள்ளார்.

"இந்தியாவின் ஆன்மாவைக் காப்பாற்றிய டெல்லி மக்களுக்கு நன்றி," என்று தேர்தல் வியூக வல்லுநர் பிரஷாந்த் கிஷோர் பதிவிட்டுள்ளார்.

#தமிழ்முரசு #டெல்லி #ஆம் ஆத்மி #கெஜ்ரிவால்

குறிப்புச் சொற்கள்