புதுடெல்லி: ஆம் ஆத்மி எம்எல்ஏவின் வெற்றி ஊர்வலத்தின் போது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூடு காரணமாக டெல்லியில் பெரும் பரபரப்பு நிலவியது.
இந்தச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து போலிசார் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது. அதன் முடிவில் 62 தொகுதிகளைக் கைப்பற்றி ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.
ஆம் ஆத்மி சார்பில் மெஹ்ராலி தொகுதியில் போட்டியிட்ட நரேஷ் யாதவ்வும் வெற்றி பெற்றுள்ளார்.
இதையடுத்து அவர் கோவிலில் சாமி தரிசனம் செய்த கையோடு தன் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க கிளம்பினார்.
தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக திறந்த வாகனத்தில் அவர் தன் தொகுதியை நோக்கிச் சென்ற போது திடீரென மூன்று மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
மொத்தம் நான்கு முறை நரேஷ் வாகனத்தை நோக்கி அந்நபர்கள் சுட்டனர். இதில் அவர் காயமின்றி உயிர் தப்பினார். எனினும் அவருக்குப் பின்னால் நின்றிருந்த ஆம் ஆத்மி கட்சித் தொண்டர் அசோக் மான் என்பவர் குண்டு பாய்ந்து அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. இவர்களில் ஒருவரை போலிசார் பிடித்துள்ளனர். அவரிடம் உடனடியாக நடத்தப்பட்ட விசாரணையின் மூலம், அவர்கள் நரேஷுக்கு குறிவைக்கவில்லை என்பது உறுதியாகி உள்ளது.
அசோக் மானையும் அவரது உறவினர் ஒருவரையும் கொலை செய்யும் நோக்கத்திலேயே துப்பாக்கிச்சூடு நடத்தியதாக பிடிபட்ட நபர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ நரேஷ், நான்கு குண்டுகள் தனது வாகனத்தை நோக்கி பாய்ந்த போது, தாம் இறப்பது உறுதி என்ற முடிவுக்கு வந்ததாகக் குறிப்பிட்டார்.
துப்பாக்கிச்சூடு நடந்ததற்கான காரணம் தமக்குத் தெரியாது என்றும், போலிசார் சரியான கோணத்தில் துப்புதுலக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் இரவு 10.30 மணிக்கு நிகழ்ந்ததால் டெல்லி முழுவதும் பெரும் பரபரப்பு நிலவியது.

