10ஆம் வகுப்பு வரை மராட்டிய மொழி கட்டாயம்

மும்பை: மகாரா‌ஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு பதவி ஏற்றதில் இருந்து முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். 

இதன் ஒரு பகுதியாக அனைத்துப் பள்ளிகளிலும் மராட்டிய மொழியைக் கட்டாயமாக்க மகாரா‌ஷ்டிர மாநில அரசு முடிவு செய்திருக்கிறது. சட்டமன்ற வரவுசெலவு திட்டக் கூட்டத்தொடர் வருகிற 24ஆம் தேதி தொடங்குகிறது. 

அப்போது இது தொடர்பான சட்ட முன்வரைவு தாக்கல் செய்யப்பட உள்ளதாக மாநில தொழில்துறை மற்றும் மராட்டிய மொழி அமைச்சர் சுபாஷ் தேசாய் தெரிவித்து உள்ளார். 

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். 

அப்போது, அவர் “மகாரா‌ஷ்டிர மாநிலத்தில் மராட்டிய மொழிப் பாடத்தைக் கற்றுக்கொடுக்காத 25,000 பள்ளிகள் உள்ளன. 

இந்தப் பள்ளிகளில் மராட்டிய மொழி விருப்பப்பாடமாகக்கூடக் கற்றுக்கொடுக்கப்படுவதில்லை. 

மகாரா‌ஷ்டிர மாநிலத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் மராட்டிய மொழி கற்றுக்கொடுக்கப்படுவது இனி கட்டாயமாக்கப்படும். வரவுசெலவு திட்டக் கூட்டத்தொடரில் மராட்டிய மொழியைப் பள்ளிகளில் கட்டாயமாக்கும் சட்ட முன்வரைவு தாக்கல் செய்யப்பட உள்ளது. அதற்கான பணிகள் இறுதி செய்யப்பட்டு வருகின்றன. 

வெகுவிரைவில் இந்த சட்ட முன்வரைவு தாக்கல்செய்யப்பட்டு அனைத்துப் பள்ளிகளிலும் 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை மராட்டிய மொழிப் பாடம் கட்டாயமாக்கப்படும் என்று அமைச்சர் சுபா‌ஷ் கூறினார்.