கர்நாடகாவில் கன்னடர்களுக்கு வேலை கோரி போராட்டம்

மங்களூரு: கர்நாடக மாநிலத்தில் தனியார் நிறுவனங்களில் இருக்கும் வேலைவாய்ப்புகளில் குறிப்பிட்ட விழுக்காட்டை கன்னடர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று அம்மாநிலத்தின் கன்னட அமைப்புகள் நேற்று மாபெரும் போராட்டம் நடத்தின. அதனையடுத்து கர்நாடக மாநிலத்தின் பல பகுதிகளில் கடைகளும் கடைத்தொகுதிகளும் மூடப்பட்டிருந்தன.

தனியார் நிறுவன வேலை வாய்ப்பில் கன்னடர்களுக்கு இட ஒதுக்கீடு பெற்றுத்தர வலியுறுத்தி கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இந்தப் போராட்டத்திற்கு ஏறக்குறைய 700க்கு மேற்பட்ட சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. போராட்டக்காரர்கள் மாநிலத்தின் பல இடங்களில் மாபெரும் ஊர்வலமாகச் சென்றனர். சில இடங்களில் வன்முறை சம்பவங்களும் நடந்தன.  

வன்முறையைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் அமைதியான முறையில் போராட்டத்தை நடத்துமாறு முதல்வர் எடியூரப்பா கேட்டுக் கொண்டதோடு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்றும் கூறியிருக்கிறார்.