“பொருளாதார வீழ்ச்சியை ஒத்துக்கொள்ள மத்திய அரசு மறுக்கிறது”

புதுடெல்லி: இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ச்சி நிலையில் உள்ளது என்றும் தற்போது உள்ள மத்திய அரசு வீழ்ச்சி என்பதை ஒத்துக்கொள்ள மறுக்கிறது என்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு பொருளாதார மந்தம் என்ற வார்த்தையையே அங்கீகரிப்ப தில்லை என்று டெல்லியில் நடை பெற்ற  புத்தக வெளியீட்டு விழாவில் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.

“நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அடையாளம் காணவில்லை எனில் நிச்சயம் நம்பகமான விடைகளை நீங்கள் ஒரு போதும் கண்டறிய முடியாது. இதுதான் உண்மையான ஆபத்து.

“பொருளாதார விவகாரங்கள் விவாதிக்கப்பட வேண்டும், ஆனால் நம்முடைய அரசு ‘பொருளாதார மந்தநிலை’ என்ற வார்த்தை இருப்பதையே அங்கீகரிப்பதில்லை. நிச்சயமாக இந்தப் போக்கு நாட்டு நலனுக்கு நல்லதல்ல. இதனால் பிரச்சினைகளை சரிசெய்ய முடியாத நிலை ஏற்படும்,” என்றார் மன்மோகன் சிங்.

தற்போது நிதிப் பற்றாக்குறை 9 விழுக்காடாக இருக்கிறது என்று சுட்டிக்காட்டிய அவர், இது அதிகப்படியான பற்றாக்குறை என்றார் மன்மோகன் சிங். இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி 9-ல் இருந்து 10 விழுக்காடு வரை செல்வதற்கு இது தடையாக அமைந்துவிடும் என்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 8 விழுக்காடு அளவிற்கு கொண்டு வருவதற்கு சாத்தியம் உள்ளது என்றும் அவர் கூறினார்.

“ஆனால் நிதிக்கொள்கையை மறுசீரமைப்பு செய்வதுடன் தைரியமான முறையில் வரி சீரமைப்புகளையும் செய்ய வேண்டும். அப்போது தான் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முடியும்.

“ஐந்து டிரில்லியன் டாலர் மதிப்புள்ள பொருளாதாரமாக இந்தியா 2024-25ஆம் ஆண்டில் மாறும் என்பது வெறும் கற்பனைதான். அதே போல் 3 ஆண்டு காலத்தில் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறுவதற்கான சாத்தியக்கூறுகளும் இப்போதைய ஆட்சியில் இல்லை,” என்றார் மன்மோகன் சிங்.