20 பெண்களை சீரழித்து, நஞ்சு கொடுத்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

20 பெண்களை சீரழித்து, நஞ்சு கொடுத்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

2 mins read
fbc35457-28c0-4a01-a3b0-6e58df61c16f
இருபது பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆட்படுத்தி, பின்னர் கொடிய நஞ்சு கொடுத்து கொலை செய்த ஆடவருக்கு மங்களூரு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. படம்: ஊடகம் -

மங்களூரு: பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆட்படுத்தி, பின்னர் கொடிய நஞ்சு கொடுத்து கொலை செய்த ஆடவருக்கு மங்களூரு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

கர்நாடகாவைச் சேர்ந்த 56 வயதான மோகன் குமார் என்ற அந்த ஆள், இருபது பெண்களை இவ்வாறு கொலை செய்துள்ளார். மேலும் அவர்கள் அனைவரிடமும் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி உள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது.

தன்னை நம்பும் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆட்படுத்தி, பிறகு சயனைடு கொடுத்து கொன்றுள்ளார் மோகன் குமார்.

கடந்த 2009ஆம் ஆண்டு பண்டுவலாவைச் சேர்ந்த 22 வயதான அனிதா என்ற பெண்ணை ஏமாற்றி சீரழித்தவர், பின்னர் கருக்கலைப்பு மாத்திரை என்று கூறி நஞ்சு கொடுத்து கொன்றார். ஹாசன் பேருந்து நிலையத்தில் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்தார் அனிதா.

இது தொடர்பாக போலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்ட போது தான், மோகன் குமார் ஆறு ஆண்டுகளில் இதே போல் பல பெண்களைக் கொன்றது தெரிய வந்தது. மங்களூருவைச் சேர்ந்த மோகன் குமார், தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். 1987ஆம் ஆண்டு மஞ்சுளா என்பவரை திருமணம் செய்த இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.

பின்னர் முதல் மனைவியை பிரிந்த மோகன்குமார், ஸ்ரீதேவி ராய் என்பவரை 1993-ல் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். அவர் மூலமாக ஒரு மகள் பிறந்த நிலையில், ஒழுக்கக்கேடு காரணமாக பணியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து இரண்டாவது மனைவியையும் பிரிந்த மோகன் குமார், பெண்களிடம் திருமண ஆசைகாட்டி தனது வலையில் சிக்கவைத்துச் சீரழித்துள்ளார்.

அவர் மீதான 20 வழக்குகளில் ஏற்கெனவே ஆயுள் மற்றும் தூக்குத் தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன.