புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், இரண்டு நாள் பயணம் மேற்கொண்டு 12 பேரைக் கொண்ட குழுவுக்குத் தலைமை ஏற்று இன்று தன் துணைவியாருடன் இந்தியா வருகிறார்.
குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புதிய வல்லபாய் பட்டேல் கிரிக்கெட் அரங்கம் வரை சுமார் 22 கி.மீ. தொலைவுக்குப் பொதுமக்கள் இரு மருங்கிலும் கூடி நின்று அமெரிக்க அதிபரை பிரம்மாண்ட முறையில் வரவேற்கிறார்கள்.
அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற பிறகு முதல்தடவையாக அதிகாரபூர்வமாக இந்தியா வரும் டிரம்ப், மக்களின் வரவேற்பை ஏற்றபடி காரிலேயே வல்லபாய் பட்டேல் கிரிக்கெட் அரங்கிற்குச் சென்று அந்த அரங்கை இந்தியப் பிரதமருடன் சேர்ந்து திறந்துவைப்பார்.
பிறகு இரு தலைவர்களும் அங்கு நடக்கும் பிரம்மாண்டமான 'டிரம்ப்புக்கு வணக்கம்' என்ற வர வேற்பு நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார்கள். அந்த நிகழ்ச்சியில் 1.25 லட்சம் பேர் கூடுகிறார்கள்.
அமெரிக்க அதிபரின் வருகையையொட்டி ஏற்கெனவே அவருடைய தரை வாகனங்களும் ஆகாய வாகனமும் குஜராத் வந்துவிட்டன. அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் அகமதாபாத்தில் முகாமிட்டு இருக்கிறார்கள். இந்தியாவைச் சேர்ந்த 25,000 போலிசார் ஐந்தடுக்குப் பாதுகாப்புப் பணியில் உள்ளனர்.
அதிபருடன் அவருடைய மனைவி மெலானியா, மகள் இவான்கா, மருமகன் ஜெராட் குஷ்னர் ஆகியோரும் வருகிறார்கள்.
குஜராத் நிகழ்ச்சிகளுக்குப் பிறகு டிரம்ப் குடும்பத்தினர் ஆக்ராவில் இருக்கும் தாஜ்மஹாலுக்குச் செல்கிறார்கள். நாளை அமெரிக்க அதிபருக்கு இந்திய அதிபரின் மாளிகையில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. அங்கு டிரம்ப்- மோடி சந்திப்பு நடக்கிறது.
அதற்குப் பிறகு அமெரிக்கா-இந்தியா தரப்பில் சில முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிபரின் இந்தியப் பயணத்தையொட்டி அதிபர் டிரம்ப்பை வாளேந்தி போரிடும் வீரனாகக் காட்டும் திருத்தப்பட்ட பாகுபலி திரைப்பட காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகி இருந்தது. அந்தக் காணொளியைத் தன் டுவிட்டரில் அதிபர் டிரம்ப் வெளியிட்டார்.
அதில், "இந்தியாவில் உள்ள எனது சிறந்த நண்பர்களைச் சந்தித்து அவர்களுடன் நேரத்தைக் கழிக்க மிகவும் ஆவலாக இருக்கிறேன்," என்று டிரம்ப் தெரிவித்து இருக்கிறார். அதேபோல் அதிபர் வருகையை ஆவலுடன் வரவேற்ப தாக இந்தியப் பிரதமரும் டுவிட்டரில் குறிப்பிட்டார்.
ஆனால் காங்கிரஸ் கட்சியோ, அமெரிக்க அதிபரை இந்தியப் பட வில்லனாகச் சித்திரித்து உள்ளது.
அதிபர் டிரம்ப்பின் இந்திய வருகைக்காக பாஜக அரசாங்கம் கோடானுகோடி பணத்தை விரயமாக்கி வருவதாகக் குறிப்பிட்டு இருக்கும் காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரான ராஜன் சவுத்ரி, அமெரிக்க அதிபரை மொகாம்போ என்ற வில்லனாகச் சித்திரித்தார்.
'மிஸ்டர் இந்தியா' என்ற இந்தி படத்தில் நடிகர் அம்ரிஷ் பூரி ஏற்று இருந்த அந்த வில்லன் கதாபாத்திரம் மிகப் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.

