அகமதாபாத்: அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்தடைந்த அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பை அகமதாபாத் விமான நிலையத்தில் பிரதமர் மோடி ஆரத்தழுவி வரவேற்றார்.
அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இசைக் கலைஞர்கள் மேள தாளத்துடன் வரவேற்பு அளித்த நிலையில், விமான நிலையத்தில் இருந்து மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்துக்கு வருகை தந்தார் அதிபர் டிரம்ப்.
விமான நிலையத்தில் இருந்து சபர்மதி ஆசிரமம் வரையிலான 22 கிலோமீட்டர் தொலைவுள்ள சாலையில் வழி நெடுகிலும் பெருந்திரளான மக்கள் கூடி நின்று கையசைத்து, அமெரிக்க அதிபரை வரவேற்றனர்.
மேலும் வழியில் முப்பதுக்கும் மேற்பட்ட மேடைகள் அமைக்கப்பட்டு இந்திய கலாச்சாரத்தை பறைசாற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
சபர்மதி ஆசிரமத்தில் டிரம்ப் தம்பதியர்க்கு கதர் துண்டு அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. காந்தி பயன்படுத்திய ராட்டையில் எவ்வாறு நூல் நூற்பது என்பது குறித்து டிரம்பிடம் ஆசிரம நிர்வாகிகள் விளக்கம் அளித்தனர்.
பின்னர் நடைபெற்ற நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப், இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நட்பு நாடாக அமெரிக்கா திகழ்கிறது என்றார்.
இந்தியா ஒட்டுமொத்த மனித குலத்திற்கே நம்பிக்கை அளிக்கிறது என்றும் இந்தியர்களின் ஒற்றுமை உலகிற்கே எடுத்துக்காட்டாக விளங்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மோடி தனது உண்மையான நண்பர் என்று தெரிவித்த டிரம்ப், இந்தியாவுக்காக பிரதமர் மோடி இரவு பகலாக உழைப்பதாகப் பாராட்டினார்.
பிரதமர் மோடி கடும் உழைப்பாளி என்றும் அவரது கடின உழைப்பால் கடந்த பத்து ஆண்டுகளில் 27 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்றும் டிரம்ப் குறிப்பிட்டார்.
அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்திய சுற்றுப்பயணம் அமெரிக்கா- இந்தியா இடையேயான நல்லுறவை பிரதிபலிக்கிறது என்றார் மோடி.

