'டெல்லி வன்முறைக்குப் பொறுப்பேற்று அமித்ஷா பதவி விலகவேண்டும்'

புதுடெல்லி: டெல்லியில் ஏற்பட்ட வன்முறைக்குப் பொறுப்பேற்று அமித் ஷா உடனடியாக பதவி விலகவேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரியங்கா காந்தி வத்ரா,           ப.சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

ராகுல் காந்தி வெளிநாடு சென்றுள்ளதால் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. 

கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களிடம் சோனியா காந்தி கூறுகையில், “டெல்லி வன்முறை கவலையளிக்கிறது. இந்த வன்முறை ஏற்கெனவே திட்டமிடப்பட்ட ஒன்று. இது ஓர் அரசியல் சூழ்ச்சி. டெல்லி தேர்தலுக்குப் பிறகு வேண்டுமென்றே இதுபோன்ற சம்பவத்தை நிகழ்த்தி உள்ளனர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும். டெல்லி வன்முறைக்கு மத்திய அரசும் உள்துறையும்தான் பொறுப்பு ஏற்க வேண்டும். இந்த வன்முறைக்கு பொறுப் பேற்று அமித் ஷா பதவி விலகவேண்டும்,” என்றார்.