டெல்லி: அதிபரை சந்தித்து அரசியல் கட்சிகள் முறையீடு

2 mins read
00436f61-a72d-4e92-bf15-52d2047a8833
டெல்லி போராட்டத்தில் கொல்லப்பட்ட போலிஸ் அதிகாரி ரத்தன் லாலின் ஈமச்சடங்கு ராஜஸ்தான் சிகார் மாவட்டத்தில் உள்ள அவருடைய கிராமத்தில் நேற்று நடந்தது. அதில் உறவினர்கள், குடும்பத்தினர் கலந்துகொண்டனர். படம்: இந்திய ஊடகம் -

புதுடெல்லி: இந்திய தலைநகர் புதுடெல்லியில் புதிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரிப்பவர்களுக்கும் அதை எதிர்ப்பவர்களுக்கும் இடையில் மூண்ட பயங்கர கலவரம் ஓய்ந்து வரும் நிலையில் அதன் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர்கள் நேற்று அதிபரைச் சந்தித்து முறையிட்டனர்.

இந்நிலையில், அந்தக் கலவரங்களில் மாண்டவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்தது. 270 பேர் காயம் அடைந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கலவரம் தொடர்பில் 106 பேரை போலிஸ் கைது செய்து இருக்கிறது. வழக்குகளும் பதியப்பட்டு உள்ளன.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும் ஆதரவாகவும் டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை மோதல் வெடித்தது.

பிறகு வன்முறைகளோடு பயங்கர கலவரமாக அந்த மோதல் மாறியதை அடுத்து துணை ராணுவப் படையினர், அதிரடிப் படையினர், போலிசார் அனைவரும் டெல்லியின் பல பகுதிகளிலும் குவிக்கப்பட்டனர். 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

வடகிழக்கு டெல்லியில் அந்த உத்தரவு நேற்றும் நடப்பில் இருந்தது. அங்கு துணை ராணுவப் படையினர் காவலில் தொடர்ந்து ஈடுபட்டனர்.

கலவரத்தைக் கட்டுப்படுத்த தவறிவிட்டதால் டெல்லி போலிஸ் துறையை மாற்றி அமைக்க மத்திய அரசாங்கம் முடிவு செய்து இருப்பதாகத் தகவல்கள் வெளியாயின.

இதனிடையே, டெல்லி முழுவதும் மக்கள் அச்சமின்றி அன்றாடக் காரியங்களில் ஈடுபடலாம் என்றும் நிலவரம் கட்டுக்குள் இருப்பதாகவும் மக்கள் பயப்பட வேண்டாம் என்றும் போலிஸ் துறை நேற்று அறிவித்தது.

இந்நிலையில், நேற்று அதிபரைச் சந்தித்துவிட்டு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் தலைவி சோனியா, பாஜக அரசாங்கமும் ஆம் ஆத்மி அரசாங்கமும் எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் கலவரத்தை வேடிக்கை பார்த்து வந்ததாகக் கூறினார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷாவை உடனடியாகப் பதவியில் இருந்து அகற்ற வேண்டும் என்று சோனியா குரல் கொடுத்தார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், டெல்லி வன்முறை நாட்டிற்கே அவமானம் என்றார்.

டெல்லி வன்முறை தொடர்பான வழக்கை விசாரித்து வந்த உயர் நீதிமன்ற நீதிபதி எஸ் முரளீதர் நள்ளிரவில் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதை எதிர்த் தரப்பினர் கடுமையாகக் குறைகூறினர். ஆனால் அந்த மாற்றம் நடைமுறையை ஒட்டியே இடம்பெற்றதாக பாஜக அரசாங்கம் தெரிவித்துவிட்டது.

இதனிடையே, டெல்லி வன்முறை சம்பவங்கள் தொடர்பாக பாஜகவினர் மீது வழக்குப் பதிவு செய்ய இது உகந்த நேரம் அல்ல என்று டெல்லி உயர் நீதிமன்ற விசாரணையில் போலிஸ் கூறியது.

கலவரத்தை தூண்டும் விதமாக பேசியோர் மீதான நடவடிக்கை என்ன என்பது குறித்து மத்திய அரசு அடுத்த மாதம் 13ஆம் தேதிக்குள் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

இவ்வேளையில், டெல்லி வன்முறைக்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள்தான் காரணம் என்பதற்கு ஆதாரமாக ஒரு காணொளி கிடைத்துள்ளதாக பாஜக அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.