புதுடெல்லி: புரளிகளை நம்ப வேண்டாம் என கோரிக்கை

புதுடெல்லி: புரளிகளை நம்ப வேண்டாம் என கோரிக்கை

2 mins read
bba41b90-a758-4260-9ce7-0ee0415854c5
வடகிழக்கு டெல்லியில் கஜுரி காஸ் என்ற பகுதியில் பாதுகாப்புப் படையினர் சுற்றுக்காவலுக்கு இடையே பொதுமக்கள் நடமாட்டம் நேற்று காணப்பட்டது. படம்: இந்திய ஊடகம் -

புதுடெல்லி: புதுடெல்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்ட ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் நடந்த வன்முறைகளில் மாண்டோர் எண்ணிக்கை நேற்று 42 ஆக உயர்ந்தது.

பல மருத்துவமனைகளிலும் சுமார் 300 பேர் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், புதுடெல்லியில் 7,000 துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் இருப்பதாகவும் டெல்லியில் அமைதி திரும்புகிறது என்றும் தெரிவித்த உள்துறை அமைச்சு, வதந்திகளை நம்பவேண்டாம் என்று பொதுமக்களைக் கேட்டுக்கொண்டது.

உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடந்த மூத்த அதிகாரிகள் கூட்டத்தைத் தொடர்ந்து அமைச்சு பொதுமக்களுக்கு இந்த வேண்டுகோளை விடுத்தது.

இதனிடையே, டெல்லி போலிஸ் படையின் புதிய ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி எஸ்.என். ஸ்ரீவஸ்தவா நேற்று நியமிக்கப்பட்டார். குற்றவாளிகள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தப்போவதாக அவர் சூளுரைத்தார்.

கடந்த 22ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை 48 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்த அவர், புதுடெல்லியில் பொதுமக்களுக்கு அச்சம் தேவை இல்லை என்றார்.

இவ்வேளையில், புலனாய்வுத் துறை ஊழியர் அங்கித் சர்மாவைக் கொலை செய்த கும்பலை வழிநடத்தியதாகவும் இந்துக்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டதாகவும் அம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் என்பவர் மீது வழக்குப் பதியப்பட்டு அவரது வீட்டில் நேற்று தடயவியல் சோதனைகள் நடந்தன.

இதற்கிடையே, டெல்லி வன்செயல்கள் பற்றி அனைத்துலக அளவில் இடம்பெறும் குறைகூறல்களை வெளியுறவு அமைச்சு கண்டித்தது. இப்போதைய முக்கியமான காலகட்டத்தில் பொறுப்பற்ற முறையில் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டாம் என்று அமெரிக்காவின் பல்வேறு தலைவர்களுக்கும் ஊடகங்களுக்கும் அனைத்துலக அமைப்புகளுக்கும் வெளியுறவு அமைச்சு கோரிக்கை விடுத்தது.

வன்செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளின் அடையாளங்கள் தெரிய வந்துள்ளதாகவும் அவர்களைப் பிடிக்க வேட்டை தொடங்கி இருப்பதாகவும் நேற்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே, டெல்லியில் கலவரம் வெடித்த இடங்களைவிட்டு வெளியேறி இருக்கும் மக்களில் பலர் தாங்கள் மறுபடியும் தங்கள் வீட்டுக்குத் திரும்பப்போவதில்லை என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

மீண்டும் வன்செயல் வெடிக்கக்கூடும் என்ற பயத்தில் தங்களுடைய உறவினர்களின் வீடுகளிலேயே பலரும் தங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.

இச்சூழலில், டெல்லி வன்முறை தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணையைக் கண்டு பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அஞ்சுவதாகக் காங்கிரஸ் குறிப்பிட்டது. ஆனால் டெல்லி கலவரத்தைத் தூண்டிவிட்டதாக காங்கிரஸ் கட்சி மீது பாஜக குறைகூறி வருகிறது.