தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழகத்தில் கொவிட்-19 அறிகுறிகளுடன் 2 வயது குழந்தை உட்பட நால்வர் மருத்துவமனையில் அனுமதி

2 mins read
d07938f4-71b4-4572-8134-8145c642e6ee
சென்னை அனைத்துலக விமான நிலையத்தில் முகக்கவசங்களுடன் பயணிகள். படம்: ஏஎஃப்பி -

உலகெங்கும் கொரோனா கிருமித்தொற்று அச்சுறுத்தி வரும் வேளையில் இந்தியாவில் 30 பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் கிருமிப் பரவல் ஏற்பட்டிருக்குமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

கொரோனா கிருமித்தொற்றை ஒத்த அறிகுறிகளுடன் இரண்டு வயது குழந்தை உட்பட மூவர் திருச்சி அரசு மருத்துவமனையில் கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 3) இரவு அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதேபோல கோயமுத்தூரிலும் இளையர் ஒருவர் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர்கள் நால்வரும் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர்களது உடலிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் சென்னையில் இருக்கும் 'தி கிங் இன்ஸ்டிடியூட் ஆஃப் பிரிவென்டிவ் மெடிசின் அண்ட் ரிசர்ச்' தெரிவித்துள்ளது.

அறிகுறிகள் கண்டதாக கோயமுத்தூரில் சிகிச்சை பெறுபவர், ஜப்பானில் ஆய்வு மாணவர் என்றும் அவர் சிங்கப்பூர் வழியாக சென்னைக்கு கடந்த மாதம் 26ஆம் தேதி வந்தார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பின்னர், ரயிலில் பயணம் செய்து அவர் கோயமுத்தூருக்குச் சென்றார்.

கோவை வந்ததிலிருந்து அவருக்கு தொண்டை வலி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்ததாகவும் நேற்று அவர் இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூவரும் மலேசியாவிலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்கள் என்று கூறப்பட்டது.

ஆனால், மதுரையிலும் தெற்கு மாவட்டங்களிலும் இத்தகைய அறிகுறிகளுடன் புதிதாக யாரும் அனுமதிக்கப்படவில்லை.

சென்னை, மதுரை, திருச்சி, கோயமுத்தூர் விமான நிலையங்களுக்கு வந்த 96,729 பயணிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொதுச் சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து இயக்குநரகத்தின் நேற்றைய அறிக்கை தெரிவித்தது.

நேற்று முன்தினம் வரை 1,292 பேர் வீட்டிலேயே இருக்குமாறு கோரப்பட்டனர். ஐவர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டனர் என்றும் அறிக்கை குறிப்பிட்டது.

வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை சென்னையில் அதிகம் எனவும் ராமநாதபுரம், கோவை, நாகப்பட்டினம் ஆகியவை அடுத்தடுத்த நிலைகளில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதற்கிடையே, கொரோனா கிருமிப் பரவல் பற்றி வதந்தி பரப்ப வேண்டாம் எனவும் உரிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். விமான நிலையங்களில் 24 மணி நேர கண்காணிப்பு, பள்ளிகளில் மாணவர்களுக்கு இத்தகைய அறிகுறிகள் தென்படுகிறதா என்பதைக் கண்காணிப்பது போன்றவை முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தமிழக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

குறிப்புச் சொற்கள்