சந்தைக்கடை அல்ல என சாடும் நிலையில் நாடாளுமன்ற நிலவரம்

சந்தைக்கடை அல்ல என சாடும் நிலையில் நாடாளுமன்ற நிலவரம்

2 mins read
fb5d040b-fb8f-4e9b-ba2f-04d3d0365cd3
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டதால் நான்காவது நாளாக மன்றம் நேற்றும் முடங்கியது. மக்களவையில் அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏழு பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். படம்: ஊடகம் -

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டதால் நான்காவது நாளாக மன்றம் நேற்றும் முடங்கியது. மக்களவையில் அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏழு பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

தமிழ்நாட்டின் விருதுநகர் தொகுதி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாக்கூர் உள்ளிட்ட அந்த ஏழு பேர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவித்தன.

டெல்லி வன்முறையைப் பற்றி நாடாளுமன்றம் விவாதிக்க வேண்டும் என்று எதிர்த்தரப்பினர் கோரி வருகிறார்கள்.

ஆனால் அதற்குப் பின்னொரு தேதி ஒதுக்கப்படும் என்று மன்றத்தில் அறிவிக்கப்பட்டு வருவதால் எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நேற்றும் அவர்களது நாடாளுமன்றப் போராட்டம் நீடித்தது.

இதனால் மாநிலங்களவை நேற்றும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொல்லை அளவுக்கு மீறியதால் "இது நாடாளுமன்றம். சந்தைக்கடை அல்ல," என்று அவைத் தலைவர் வெங்கையா நாயுடு கடுமையாக எச்சரித்தார்.

ஆனாலும் டெல்லி கலவரம் பற்றி மாநிலங்களவை விவாதித்தே தீரவேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்ந்து குரல்கொடுத்தனர்.

இதனால் மன்றத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

இந்திய நாடாளுமன்றத்தின் வரவுசெலவுத் திட்ட கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கியது முதலே எதிர்த்தரப்பினர் மன்றத்தை நடத்தவிடாமல் ரகளையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

டெல்லி வன்செயலைப் பற்றி விவாதிக்க வேண்டும் என்றும் அந்த வன்செயல் தொடர்பில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்றும் அவர்கள் தொடர்ந்து குரல்கொடுத்து வருகிறார்கள்.

ஆனால் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டு அதற்குப் பதிலாக கொரோனா கிருமி விவகாரத்தை நாடாளுமன்றம் விவாதிக்க தொடங்கி உள்ளது.