புதுடெல்லி: புதுடெல்லி கலவரம் தொடர்பான வழக்குகளை உடனே விசாரிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அந்த விசாரணை இன்று தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முழுவதும் பரபரப்பான டெல்லி கலவரம் தொடர்பான வழக்குகளை டெல்லி உயர் நீதிமன்றம் நான்கு வார காலத்துக்கு ஒத்தி வைத்து இருந்தது.
கலவரத்தைத் தூண்டும் வகையிலும் இந்தியாவுக்கு எதிராகவும் பேசியவர்கள் மீது போலிஸ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று தாக்கலான மனுக்கள் தொடர்பில் அரசாங்கம் பதிலளிக்க நான்குவார கால அவகாசத்தையும் உயர் நீதிமன்றம் அளித்து இருந்தது.
ஆனால் இந்த உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் நிராகரித்து உடனே வழக்கு விசாரணையைத் தொடங்கும்படி உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் அந்த விசாரணை இன்று தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனிடையே, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்தபோது இந்தியாவுக்கு எதிராக முழக்கமிட்டவர்கள், பகைமையைத் தூண்டும் வகையில் பேசியவர்கள் மீது போலிசார் வழக்குப் பதியத் தொடங்கிவிட்டார்கள்.
டெல்லி போராட்டம் தொடர்பில் 531 வழக்குகள் பதியப்பட்டு இருக்கின்றன. 1,600க்கும் மேற்பட்டவர்கள் கைதாகி இருக்கிறார்கள். பதிவான வழக்குகளில் 47 வழக்குகள் ஆயுதச் சட்டத்தின் கீழ் பதியப்பட்டு உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இவ்வேளையில், டெல்லியில் கலவரம் நடந்த இடங்களில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் புதிய வன்செயல்கள் எதுவும் இல்லை என்றும் போலிஸ் அறிவித்து உள்ளது.
டெல்லி வன்முறை தொடர்பில் தேடப்பட்டு வந்த ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் கவுன்சிலர் தாஹிர் உசைன் டெல்லி நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார்.
டெல்லி வன்முறைகள் தொடர்பில் 46 பேர் பலியானார்கள். 200க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். மாண்டவர்களில் அங்கித் சர்மா என்ற உளவுப்பிரிவு அதிகாரியும் ஒருவர் ஆவார். அவரது கொலை தொடர்பில் தாஹிர் உசைனை போலிஸ் தேடி வந்தது.
ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டார். ஆம் ஆத்மி கட்சியும் அவரைக் கட்சியைவிட்டு நீக்கியது.
இந்த நிலையில், நேற்று அவர் தானாகவே போலிசிடம் சரண் அடைந்து கைதானார்.

