சிலை திருட்டு வழக்கு: சிங்கப்பூரிலிருந்து சென்றவர் திருச்சியில் கைது

சிலை திருட்டு வழக்கு: சிங்கப்பூரிலிருந்து சென்றவர் திருச்சியில் கைது

1 mins read
8e3fd6ed-33c2-47ea-86b5-b1dd947b5031
இரு தினங்களுக்கு முன்பு தமிழகம் திரும்பிய சரவண பெருமாள், திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நின்றிருந்தபோது சிலை தடுப்பு பிரிவு டிஎஸ்பி.கதிரவன் தலைமையிலான போலிசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.   -

திருச்சி அருங்காட்சியகத்தில் நடந்த சிலைகள் திருட்டு வழக்கில் கடந்த 11 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பிரபல கொள்ளையனை போலிசார் திருச்சியில் கைது செய்தனர்.

திருச்சி கோட்டை அருங்காட்சியகத்தில் 2009ம் ஆண்டு 31 சிலைகள் கொள்ளைபோயின.

இதன் தொடர்பில் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலிசார் வழக்கு பதிவு செய்து 9 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 21 பஞ்சலோக சிலைகள் மீட்கப்பட்டன.

இந்த வழக்கின் தொடர்பில் முக்கிய குற்றவாளியான காரைக்குடி நெற்புகைபட்டியைச் சேர்ந்த 40 வயது சரவண பெருமாளை போலிசார் தேடி வந்தனர்.

அவர் சிங்கப்பூரில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு தமிழகம் திரும்பிய சரவண பெருமாள், திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நின்றிருந்தபோது சிலை தடுப்பு பிரிவு டிஎஸ்பி.கதிரவன் தலைமையிலான போலிசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

சரவண பெருமாளிடம் விசாரணை நடத்திய போலிசார், பின்னர் அவரை கும்பகோணத்தில் உள்ள தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் கடந்த 3ஆம் தேதி நள்ளிரவு முன்னிலைப்படுத்தினர்.

சரவண பெருமாளை இம்மாதம் 17ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து நேற்று அதிகாலை அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

பட்டுக்கோட்டையில் உள்ள உதயசூரியபுரம் அடகுக் கடையில் 6 கிலோ தங்கம் திருடிய வழக்கிலும் சரவண பெருமாள் தேடப்பட்டு வந்தவர் என்று தமிழக ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

#சிலைதிருட்டு #சிங்கப்பூர் #திருச்சி