புதுடெல்லி: வாராக் கடன்களின் அளவு வெகுவாக அதிகரித்ததை அடுத்து 'யெஸ்' வங்கியின் செயல்பாடுகள் முடங்கி உள்ளன. இதையடுத்து மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
யெஸ் வங்கி சில நிறுவனங்களுக்கு சுமார் 10 ஆயிரம் கோடி ருபாய் கடன் அளித்துள்ளது. இவற்றுள் பல நிறுவனங்கள் திவாலாகும் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் யெஸ் வங்கியின் வாராக் கடன் கடுமையாக அதிகரித்துள்ளது.
இதையடுத்து தனது மூலதனத்தை உயர்த்தும் நோக்கத்துடன், ரூ.14 ஆயிரம் கோடி நிதி திரட்ட கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வங்கியின் இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்தது. ஆனால் எதிர்பார்த்த அளவில் முதலீடு வராத நிலையில் அந்த இலக்கை ரூ.10 ஆயிரம் கோடியாக குறைத்தும் பலனில்லை.
இந்நிலையில் வாராக் கடன்களால் கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது யெஸ் வங்கி. வங்கியைக் காக்கும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கியும் நிதியமைச்சகமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இதையடுத்து இவ்வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிகபட்சமாக 50 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே எடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் மார்ச் 5ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் யெஸ் வங்கி இருக்கும் என்ற அறிவிப்பும் வெளியானதால் யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள் இடையே பீதி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய பொருளாதாரத்தை பிரதமர் மோடி நாசம் செய்துவிட்டார் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி சாடியுள்ளார்.
மோடியும் அவரது சிந்தனைகளும் தான் தற்போது ஏற்பட்டுள்ள நிலைக்கு காரணம் என அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் யெஸ் வங்கியில் முதலீடு செய்திருப்பவர்களின் பணம் பத்திரமாக இருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
யெஸ் வங்கிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியைப் போக்குவதற்கு ரிசர்வ் வங்கி கூடிய விரைவில் ஒரு நல்ல தீர்வைக் கண்டறியும் என அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ரிசர்வ் வங்கியுடன் மத்திய அரசு தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருவதாக குறிப்பிட்ட அவர், அவ்வங்கியின் வாடிக்கையாளர்கள் கவலை கொள்ளத் தேவையில்லை எனக் கூறியுள்ளார்.

