கர்நாடகா: முகாம் அமைக்க தீவிரவாதிகள் திட்டம்

1 mins read

பெங்களூரு: கர்நாடகா வனப் பகுதியில் தீவிரவாதிகள் ரகசிய பயிற்சி முகாம்களை அமைக்க திட்டமிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தேசிய புலனாய்வு முகவை இத்தகவலை அம்மாநில அரசுக்குத் தெரிவித்துள்ளது.

அண்மையில் நாடு முழுவதும் நாச வேலைகளுக்குத் திட்டமிட்டிருந்த தீவிரவாதிகள் சிலரை டெல்லி போலிசார் கைது செய்தனர்.

விசாரணையில், இவர்களுக்கு டெல்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களைச் சேர்ந்தவர்களுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த ஐந்து பேர் கைதாகி உள்ளனர். இவர்களுடன் தொடர்புடைய இடங்களில் போலிசார் அதிரடி சோதனை நடவடிக்கை மேற்கொண்ட போது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நாச வேலைக்கு சதித்திட்டம் தீட்டியது தொடர்பான விவரங்கள் கிடைத்தன.

இந்நிலையில் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் தமிழகத் தலைவராகச் செயல்பட்ட காஜா மொய்தீன், தென்னிந்தியாவைச் சேர்ந்த சிலரை தனது இயக்கத்தில் சேர்த்துக்கொண்டதாகவும் இவர்கள் அண்மையில் நேப்பாளத்தில் ஒன்றுகூடி சதிச் செயல்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

மேலும் கர்நாடக மாநில வனப்பகுதியில் தீவிரவாத பயிற்சி முகாமை அமைப்பது, வெளிநாடுகளில் ஆயுத பயிற்சி பெறுவது உள்ளிட்ட திட்டங்களையும் வகுத்திருப்பதாக தேசிய புலனாய்வு முகைமை மத்திய, மாநில அரசுகளை எச்சரித்துள்ளது.

இதையடுத்து கர்நாடக காவல்துறை கண்காணிப்பு நடவடிக்கையைத் தீவிரப்படுத்தி உள்ளது.

சந்தேக நபர்களை உடனுக்குடன் கைது செய்து விசாரித்து வருவதாகவும், வனப் பகுதிகளில் சுற்றுக்காவல் தீவிரமடைந்துள்ளதாகவும் கர்நாடகா காவல்துறை வட்டாரங்கள் கூறியதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.