நாடாளுமன்ற வளாகத்தில் எம்பிக்கள் பேராட்டம்

நாடாளுமன்ற வளாகத்தில் எம்பிக்கள் பேராட்டம்

2 mins read
165fee24-3c4a-441c-85c4-37a5c8b9dfe5
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ் எம்பிக்கள் மக்களவையில் முழக்கங்கள் எழுப்பினர். இதனால் நேற்று நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் காங்கிரஸ் எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். படம்: ஊடகம் -

புதுடெல்லி: காங்கிரஸ் எம்பிக்கள் ஏழு பேர் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முழுவதும் பங்கேற்க இயலாத வகையில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக‌க்கோரி காங்கிரஸ் எம்பிக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

நேற்று காலை ராகுல் காந்தி தலைமையில் இந்தப் போராட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

டெல்லியில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த உள்துறை அமைச்சர் அமித்ஷா தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன. இதையடுத்து அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும், டெல்லி வன்முறை குறித்து நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், மத்திய அரசு இதற்கு இன்னும் செவிசாய்க்கவில்லை. இதனால் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தற்போது அவை நடவடிக்கைகள் முடங்கியுள்ளன.

முன்னதாக அவையில் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக தமிழகத்தைச் சேர்ந்த மாணிக்கம் தாக்கூர் உட்பட ஏழு எம்பிக்களை பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க தடை விதித்து சபாநாயகர் ஓம்.பிர்லா உத்தரவிட்டார். எனினும் எதிர்க்கட்சிகளின் போராட்டம் நீடித்து வருகிறது.

நேற்றும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ் எம்பிக்கள் மக்களவையில் முழக்கங்கள் எழுப்பினர். இதனால் நேற்று நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக ஹோலி பண்டிகை முடிந்த பின்னர் இது குறித்து விவாதிக்கலாம் என அவைத் தலைவர் தெரிவித்தார். ஆனால் எதிர்க்கட்சிகள் இதை ஏற்கவில்லை.

நேற்று மாநிலங்களவையில் அமளி நிலவியது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் டெல்லி வன்முறை விவகாரம் தொடர்பாக முழக்கங்கள் எழுப்பினர்.

அனைவரும் அமைதி காக்க வேண்டும் என அவைத் தலைவர் வெங்கையா நாயுடு கேட்டுக் கொண்ட போதிலும் பலன் இல்லை.

அமளி நீடித்ததால் அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் அறிவித்தார். இனி ஹோலி பண்டிகை முடிந்து 11ஆம் தேதி அவை மீண்டும் கூடும்.

எனினும் தங்கள் கோரிக்கையைக் கைவிடப்போவதில்லை என்றும், போராட்டம் நீடிக்கும் என்றும் எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.