திருவனந்தபுரம்: கேரளாவில் கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதியர் ஓராண்டு வரையில் பாதுகாப்பாக தங்குவதற்காக காப்பகங்களை அமைக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.
நாடு முழுவதும் கலப்புத் திருமணம் செய்துகொள்பவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையே நிலவுகிறது. இதையடுத்து இத்தகைய ஜோடிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு காப்பகங்களை அமைக்க தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஒத்து ழைப்புடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கேரள சமூக நலத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார்.
"கலப்புத் திருமணம் செய்யும் தம்பதியர் பொதுப்பிரிவினராக இருந்து, ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கும் குறைவாக இருக்கும் பட்சத்தில் சுய வேலைவாய்ப்புக்கான நிதியுதவியாக அவர்களுக்கு ரூ.30 ஆயிரம் வழங்கப்படுகிறது," என்றார் அம்மாநில சமூக நலத்துறை அமைச்சர் சைலஜா.
கலப்புத் திருமண தம்பதியரில் ஒருவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சோந்தவராக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு ரூ.75,000 நிதியுதவி அளிக்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

