மும்பை: கோழிகள் மூலம் கொரோனா கிருமி பரவும் என்று கிளம்பிய வதந்தி காரணமாக மகாராஷ்டிர மாநிலத்தில் கோழி மற்றும் அது சார்ந்த தொழில்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அங்கு மாதந்தோறும் சுமார் 500 கோடி ரூபாய் அளவுக்கு கோழி வளர்ப்போர் இழப்பை எதிர்கொள்வதாகத் தெரியவந்துள்ளது.
கொரோனா கிருமித்தொற்று பாதிப்பு குறித்துப் பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இவற்றுள் பெரும்பாலானவை பொய்யான தகவல்கள்.
அவற்றுள் கோழி, முட்டைகளை உட்கொண்டால் கொரோனா கிருமித்தொற்று ஏற்படும் என்ற தகவலும் அடங்கும்.
வேகமாகப் பரவிய இந்த வதந்தி காரணமாக மகாராஷ்டிராவில் அசைவ உணவுப் பிரியர்கள் கோழி, முட்டைகள் சாப்பிடுவதை நிறுத்தி உள்ளனர்.
வீட்டில் கோழிக்கறி சமைக்கப்படுவதில்லை. அதேபோல் உணவகங்கள் சென்று அசைவம் சாப்பிடுவோரின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
முன்பு 120 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்டு வந்த கோழிகளின் விலை தற்போது 60 ரூபாயாகக் குறைந்துள்ளது. முன்பு 65 ரூபாய்க்கு விற்பனையான ஒரு டஜன் கோழிமுட்டை தற்போது 48 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இதையடுத்து கோழிகளாலும், உணவுப் பொருட்களாலும் கொரோனா கிருமித்தொற்று ஏற்படாது என்று மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகிவிட்டது என்கிறார் மும்பை கால்நடை மருத்துவக் கல்லூரியின் தலைவரான அஜித் ரணடே.
இது தொடர்பாக மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கோழி மற்றும் உணவுப் பொருட்களால் கொரோனா கிருமித்தொற்று ஏற்படும் என உலகின் எந்தப் பகுதியிலும் நிரூபிக்கப்படவில்லை என்றார்.
மகாராஷ்டிராவில் மாதந்தோறும் சுமார் 4.5 கோடி பிராய்லர் கோழிகள் உட்கொள்ளப்படுவதாக குறிப்பிட்ட அவர், தற்போது இந்த எண்ணிக்கையில் பெரும் சரிவு ஏற்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டினார்.
"ஒரு கிலோ எடை கொண்ட கோழிக்கு அதை வளர்த்தவர்கள் சுமார் 70 ரூபாய் செலவிடுகிறார்கள். இந்நிலையில் ஒவ்வொரு கோழிக்கும் அவர்கள் 55 ரூபாய் வரை நஷ்டத்தை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது.
"அதேபோல் மகாராஷ்டிராவில் நாள்தோறும் 1.5 கோடி முட்டைகள் விற்பனையாவது வழக்கம். ஆனால், தற்போது ஒவ்வொரு முட்டைக்கும் கோழிப்பண்ணையாளர்கள் 1 ரூபாயை இழக்க வேண்டி உள்ளது," என்றார் அஜித் ரணடே.
கொரோனா கிருமித்தொற்று மனிதத் தொடர்புகளால்தான் பரவுகிறது என்றும் விலங்குகளில் இருந்து மனிதர்களுக்குப் பரவுவதில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினர்.
கோழிகளுடன் தொடர்புடைய துணைத் தொழில்களும் வீண் வதந்திகளால் பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக அவர் கவலை தெரிவித்தார்.
"மேலும் கோழி மற்றும் முட்டைகளை உட்கொள்ளாமல் இருப்பதால் பலர் அவற்றின் வழி கிடைக்கும் புரதச் சத்துகளை இழக்க நேரிடும். இந்திய சைவ உணவில் போதுமான புரதச் சத்துகள் இல்லை.
"இந்நிலையில் கோழியையும் முட்டைகளையும் தவிர்த்தால் நோய் எதிர்ப்புச் சக்தி மேலும் குறையும் என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்," என அஜித் ரணடே மேலும் தெரிவித்துள்ளார்.

