புதுடெல்லி: வாராக் கடன்களால் கடும் நிதிநெருக்கடியில் சிக்கித் தவிக்கும் 'யெஸ்' வங்கியின் நிறுவனரான ராணா கபூர், அமலாக்கப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை 20 மணி நேரம் நீடித்தது. அதன் முடிவில் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை குற்றச்சாட்டின் பேரில் ராணா கபூரைக் கைது செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பல நிறுவனங்களுக்கு 'யெஸ்' வங்கி முறைகேடாக கடன் வழங்கி இருப்பதாகவும், இது தொடர்பான விசாரணைக்கு ராணா கபூர் சரியாக ஒத்துழைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் இல்லை என்ற சந்தேகத்தின் பேரில் பல வங்கிகள் கடனளிக்க முன்வராத தனியார் நிறுவனங்களுக்கும் கூட 'யெஸ்' வங்கி பெரும் தொகைகளை கடனாக அளித்துள்ளது. இதன் காரணமாகவே அவ்வங்கியின் வாராக்கடன் அளவு வெகுவாக அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
ராணா கபூரின் நேரடி நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டபோதே 'யெஸ்' வங்கி தகுதியற்ற பெரு நிறுவனங்களுக்குக் கடன் வழங்கியதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்குப் பிரதிபலனாக கடன் பெற்ற நிறுவனங்கள் ராணா கபூர் மனைவியின் வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்தியதாகக் கூறப்படுகிறது.
இத்தகைய குற்றச்சாட்டுகளின் பேரில் ராணா கபூரை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தங்கள் அலுவலகத்துக்கு நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர். எனினும் அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையே சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனையில் ராணா கபூரின் மனைவிக்கும் மகள்களுக்கும் தொடர்பிருப்பதாக சந்தேகிக்கும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் அதுகுறித்து விசாரிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

