ஹைதராபாத்: தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் தலைவர்களின் பட்டியலில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவும் இணைந்துள்ளார்.
தெலுங்கானா சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் நடைபெற்ற விவாதங்களின்போது பேசிய அவர், மத்திய அரசு கொண்டு வரும் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக வலிமையான தீர்மானத்தை நிறைவேற்றி நாட்டுக்குச் செய்தி சொல்லவேண்டும் என்று குறிப்பிட்டார்.
தம்மிடம்கூட பிறப்புச் சான்றிதழ் இல்லை என்று குறிப்பிட்ட அவர், பிறகெப்படி தமது தந்தை பிறந்த இடம், பிறந்த தேதி ஆகியவற்றை நிரூபிக்க இயலும் எனக் கேள்வி எழுப்பினார்.
தமக்கும்கூட தேசிய குடி மக்கள் பதிவேட்டைப் பற்றி நினைக்கும்போது கவலையாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். தாம் ஒரு சிறிய கிராமத்தில் உள்ள வீட்டில் பிறந்ததாகவும் அப்போது அச்சுற்று வட்டாரத்தில் மருத்துவமனைகள் இல்லை எனவும் அவர் நினைவுகூர்ந்தார்.
"அப்போதெல்லாம் கிராமத்தில் உள்ள பெரியவர்கள் 'ஜென்மநாமா' என்று பிறப்புக் குறித்து எழுதிக் கொடுப்பார்கள். அதில் அரசாங்கத்தின் அதிகாரபூர்வ முத்திரை இருக்காது. நான் பிறந்தபோது என் குடும்பத்துக்கு 580 ஏக்கர் நிலம் கட்டடம் எல்லாம் இருந்தன. அப்படி இருந்தும்கூட என்னால் பிறப்புச் சான்றிதழைப் பெற முடியவில்லை.
"அப்படியெனில் பட்டியல் இனத்தில் உள்ள மக்கள், பழங்குடியினர், ஏழை எளிய மக்களால் எப்படி பிறப்புச் சான்றிதழை வழங்கமுடியும்?" என்று சந்திரசேகர ராவ் கேள்வி எழுப்பினார்.
குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்பது மிகவும் எரிச்சலூட்டம் சட்டம் என்று குறிப்பிட்ட அவர், இச்சட்டம் இந்திய அரசியல் அமைப்புக்கு விரோதமானது என்றார்.
இதற்கிடையே, உலகில் உள்ள அனைத்து மக்களையும் வரவேற்று குடியுரிமை வழங்கும் ஒரேயொரு நாட்டையாவது தேசிய குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பவர்களால் காட்ட முடியுமா? என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

