மும்பை: யெஸ் வங்கி விவகாரம் தொடர்பில் சிபிஐ அதிகாரிகள் மும்பையில் நேற்று ஏழு இடங்களில் இடைவிடாமல் சோதனை நடத்தினர்.
சோதனை நடந்த இடங்கள் அந்த வங்கியை நிறுவிய ராணா கபூருக்குச் சொந்தமானவை என்று தெரிவிக்கப்பட்டது. கள்ளப்பணம் விவகாரம் தொடர்பில் மும்பையில் ராணா கபூரை அமலாக்கப் பிரிவு கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியது.
நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்று சிபிஐ அதிகாரிகள் அவரை இப்போது விசாரிக்கிறார்கள்.
டிஎச்எஃப்எல் என்ற நிறுவனம் ராணா கபூர் குடும்பத்தினருக்கு ரூ. 600 கோடி லஞ்சம் கொடுத்து இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தின் உரிமையாளரான கபில் வதாவன் என்பவருடன் சேர்ந்து ராணா கபூர் சதித்திட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்.
யெஸ் வங்கியில் இருந்து பெரும் பணத்தை எடுத்து ராணா கபூர் அந்த நிறுவனத்திற்குக் கொடுத்து இருக்கிறார்.
இதற்குக் கைமாறாக ரூ. 600 கோடியை ராணா கபூர் குடும்பம் பெற்று இருக்கிறது என்று சிபிஐ கூறுகிறது.
இந்த மோசடி 2018 ஏப்ரல், ஜூன் மாதங்களிடையே உருவானதாக சிபிஐ தெரிவிக்கிறது. அப்போது டிஎச்எஃப்எல் நிறுவனத்திற்கு குறுகிய கால கடன் பத்திரங்களாக ரூ. 3,700 கோடி பணத்தை யெஸ் வங்கி கொடுத்து இருக்கிறது.
இதற்குக் கைமாறாகத்தான் ராணா குடும்பம் கடன் என்ற பெயரில் ரூ. 600 கோடியைப் பெற்று இருக்கிறது என்றும் சிபிஐ தெரிவிக்கிறது.
இதனிடையே, யெஸ் வங்கியில் ரூ.545 கோடி பணம் போட்டு வைத்திருந்த பூரி ஜெகன்நாதர் கோயில் நிர்வாகம், அந்தப் பணத்தை எடுக்க முடியாமல் தவிக்கிறது. இதன் தொடர்பில் மத்திய நிதி அமைச்சகத்துக்கு அது கடிதம் எழுதியுள்ளது.
இந்த நிலையில், யெஸ் வங்கிப் பிரச்சினைக்கு நீ தான் காரணம், நான் தான் காரணம் என்று பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் பரஸ்பரம் குற்றம் சுமத்தி வருகின்றன.

