மும்பை: இந்தியாவின் பங்குச் சந்தை நேற்று படு வீழ்ச்சி கண்டது. ரூபாயின் மதிப்பும் வீழ்ந்தது. கொரோனா கிருமித் தாக்குதல், இந்தியாவின் யெஸ் வங்கி பிரச்சினை, கச்சா எண்ணெய் விலைச் சரிவு ஆகியவை காரணமாக நேற்று இந்தியாவின் மும்பை பங்குச் சந்தை ஆட்டம் கண்டதாகத் தகவல்கள் தெரிவித்தன.
சென்செக்ஸ் குறியீடு 1,941 புள்ளிகள் சரிந்தது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி கிட்டத்தட்ட 3% சரிந்து 10,675 புள்ளிகளாகவும் இருந்தன.
அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பும் கடுமையாக சரிந்தது. ஒரு டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 74.0087 ரூபாய் என்ற அளவுக்கு இறக்கம் காணப்பட்டது.
இந்தியாவின் யெஸ் வங்கி மோசடிகள் நேற்று பங்குச் சந்தையில் நேற்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இந்தியப் பொருளியல் இறங்குமுகமாகி வருகிறது என்பதற்கான அறிகுறிகள் தெள்ளத்தெளிவாக வெளியாகி வரும் நிலையில், கொரோனா கிருமிகளும் சேர்ந்து முதலீட்டார்களிடம் அதிக அளவில் அவநம்பிக்கையை ஏற்படுத்திவிட்டதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
இதே நிலை நீடித்தால் இந்தியாவின் நாணயமும் பங்குச் சந்தையும் கவலை அடையக்கூடிய நிலையை எட்டிவிடும் என்று அவர்கள் எச்சரித்தனர்.
இந்தியாவின் பொருளியல் வளர்ச்சி மிகவும் குறைந்து வருகிறது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் துணிந்து பணத்தைப் போட தயங்குகிறார்கள்.
கொரோனா கிருமி காரணமாக உலகம் முழுவதும் பங்குச் சந்தைகள் இறங்குமுகமாகிவிட்டன. இந்நிலையில் கச்சா எண்ணெய் விலையும் நேற்று 30 விழுக்காட்டுக்கும் மேலாக வீழ்ச்சி கண்டது.

