மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழும் சூழல்

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழும் சூழல்

2 mins read
f20bcfd0-cd99-4ee7-8be4-ea35903c3e52
காங்கிரசில்கமல்நாத்துக்கும் சிந்தியாவுக்கும் இடையே பனிப்போர் தொடர்ந்தது. அதனையடுத்து சிந்தியா, நேற்று திடீரென உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் சென்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். சற்று நேரத்திற்குப் பிறகு அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் தமது பதவி விலகல் கடிதத்தை அவர் அனுப்பினார். படம்: ஊடகம் -

போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 22 எம்எல்ஏக்கள் பதவி விலகிவிட்டதால் அங்கு காங்கிரஸ் ஆட்சி கவிழும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதும் மூத்த தலைவர் கமல்நாத்தும் இளம் தலைவரான ஜோதிராதித்ய சிந்தியாவும் முதல்வர் பதவிக்குப் போட்டியிட்டனர். காங்கிரஸ் தலைமை கமல்நாத்தைத் தேர்வு செய்தது.

இதனால் சிந்தியாவும் அவரது ஆதரவாளர்களும் அதிருப்தியடைந்தனர். கமல்நாத்துக்கும் சிந்தியாவுக்கும் இடையே பனிப்போர் நீடித்தது.

இந்நிலையில், நேற்று திடீரென உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் சென்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார் சிந்தியா. சற்று நேரத்திற்குப் பிறகு அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் தமது பதவி விலகல் கடிதத்தை அவர் அனுப்பினார்.

அதில், "காங்கிரஸ் கட்சியில் இருந்தால் நாட்டுக்கும் எனது மாநில மக்களுக்கும் பணியாற்ற முடியாது. முன்னேறிச் செல்ல வேண்டும் என்றால் புதிய தொடக்கம் தேவை. இதனால் காங்கிரசில் இருந்து விலகுகிறேன்," என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதால் ஜோதிராதித்ய சிந்தியாவை காங்கிரசில் இருந்து நீக்குவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபால் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதையடுத்து, ம.பி. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 22 பேர் பதவி விலகுவதாக ஆளுநருக்குக் கடிதம் அனுப்பி உள்ளனர். அவர்களுள் ஒருவரான பிசாகு லால் சாகு என்பவர் முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌகான் முன்னிலையில் பாஜகவில் இணைந்துவிட்டார்.

மொத்தம் 230 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியமைக்க 116 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை.

கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களிலும் பாஜக 107 இடங்களிலும் வென்றன. இதையடுத்து, பகுஜன் சமாஜ் எம்எல்ஏக்கள் இருவர், சமாஜ்வாடி எம்எல்ஏ ஒருவர், சுயேச்சைகள் மூவரின் ஆதரவுடன் 15 ஆண்டுகளுக்குப் பின் ம.பி.யில் காங்கிரஸ் ஆட்சியமைத்தது.

இந்த நிலையில், தற்போது 22 எம்எல்ஏக்களின் பதவி விலகல் கடிதத்தை ஆளுநர் ஏற்றுக்கொண்டால் ம.பி. சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை இழந்துவிடும்.

காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தால் பாஜக ஆட்சியமைக்க உரிமை கோரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜகவில் சிந்தியா

இதனிடையே, காங்கிரசைவிட்டு விலகிய ஜோதிராதித்ய சிந்தியா விரைவில் பாஜகவில் இணைவார் எனச் சொல்லப்படுகிறது. அப்படி இணையும் பட்சத்தில் அவருக்கு பாஜக சார்பில் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் பதவி வழங்கப்படலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது.