ஆட்சி பறிபோவதைத் தடுக்க தவியாய் தவிக்கும் காங்கிரஸ்

ஆட்சி பறிபோவதைத் தடுக்க தவியாய் தவிக்கும் காங்கிரஸ்

2 mins read
9c222e7e-c450-4237-85c6-9b7327d26322
மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 22 பேர் பதவி விலகிவிட்டதால் கமல்நாத்தின் ஆட்சி கவிழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. படம்: ஊடகம் -

புதுடெல்லி: மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 22 பேர் பதவி விலகிவிட்டதால் கமல்நாத்தின் ஆட்சி கவிழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து மத்திய பிரதேச அரசியலில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.

காங்கிரசில் இருந்து மேலும் சில எம்எல்ஏக்களை வெளியேற்று வதற்கான முயற்சிகள் நடப்பதாகத் தகவல் வெளியானது. மேலும் சில எம்எல்ஏக்களிடம் மர்ம நபர்கள் தொடர்பு கொண்டு கோடிக்கணக்கில் பணம் தருவதாக பேரம் பேசியதாகவும் தெரிய வந்துள்ளது.

இதனால் மத்திய பிரதேசத்தில் எம்எல்ஏக்களை இழுப்பதற்கு பாஜக-காங்கிரஸ் இருதரப்பினரும் கடுமையான குதிரைபேரத்தில் ஈடு பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து எம்எல்ஏக்களை தக்கவைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளை பாஜகவும் காங்கிரசும் மேற்கொண்டுள்ளன.

பாரதிய ஜனதா கட்சி எம்எல்ஏக்கள் 107 பேரின் சந்திப்பு நேற்று முன்தினம் மாலை போபாலில் நடைபெற்றது. அந்தக் கூட்டம் முடிந்ததும் பாஜக எம்எல்ஏக்கள் அனைவரும் 5 சொகுசு பேருந்துகளில் ஏற்றப்பட்டனர். அந்த பேருந்து டெல்லி நோக்கி சென்றது.

நள்ளிரவில் அந்த 5 பேருந்துகளும் டெல்லி புறநகர் பகுதியான அரியானாவின் குர்கான் நகரைச் சென்று அடைந்தது. அங்குள்ள ஐ.டி.சி. நட்சத்திர ஓட்டலில் பாஜக எம்எல்ஏக்கள் 101 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 92 பேர் இரவில் போபாலில் கூடி ஆலோசனை நடத்தினார்கள். அவர்கள் அனைவரும் முதல்வர் கமல்நாத்துக்கு முழு ஆதரவு தெரிவிப்பதாக எழுதிக்கொடுத்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஜெய்ப்பூரிலுள்ள உல்லாசக்கூடத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் அதிருப்தி எம்எல் ஏக்களும் ஜோதிராதித்ய சிந்தியா வின் ஆதரவாளருமான 22 எம்எல் ஏக்கள் பெங்களூரிலுள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி உள்ளனர். அவர்களைச் சந்தித்து சமாதானப்படுத்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பெங்களூர் விரைந்து உள்ளனர். எம்எல்ஏக்கள் அனைவரும் ஜெய்ப்பூர் டெல்லி மற்றும் பெங்களூரில் இருப்பதால் மத்தியபிரதேச மாநில அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், "இந்திய பிரதமரே... தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் ஆட்சியை சீர்குலைப்பதில் ஓய்வில்லாமல் பணியாற்றுகிறீர்கள். கச்சா எண்ணெய் விலை 35% சரிவடைந்துள்ளதை நீங்கள் கவனிக்கத் தவறிவிட்டீர்கள். மேலும் இந்த நேரத்தில் இந்திய மக்கள் பயனடையும் வகையில் பெட்ரோல் விலையை ரூ.60-க்கும் கீழே குறைத்து அறிவித்தால் மந்தம் அடைந்துள்ள பொருளாதாரத்தை மீண்டும் உயர்த்த உதவும்," என்று ராகுல் கூறியுள்ளார்.