ரூ.547 கோடி இணைய வங்கி மோசடி

ரூ.547 கோடி இணைய வங்கி மோசடி

1 mins read

பெங்களூரு: இந்தியாவில் இணையம் மூலம் மோசடியில் ஈடுபடுபவர்கள் கடந்த 3 ஆண்டுகளில் 547 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிய வந்துள்ளது.

2019 அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான 92 நாட்களில் மட்டும் ஏடிஎம் அட்டை, கடன் அட்டை, இணைய வங்கிச்சேவை ஆகிய வழிகளில் மோசடி நடைபெற்றதாக 21 ஆயிரத்து 41 புகார்கள் பதிவாகியுள்ளன. இவற்றில் மோசடி செய்யப்பட்ட தொகை 128 கோடி ரூபாய் ஆகும். 2019 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் இணையத்தள மோசடி மூலம் 101 கோடி ரூபாய் பறிபோயுள்ளது.

2017 ஏப்ரல் முதல் 2019 டிசம்பர் வரையுள்ள 3 ஆண்டுகளில் இணையத்தள மோசடி மூலம் மொத்தம் 547 கோடி ரூபாயை வாடிக்கையாளர்கள் இழந்துள்ளனர். இந்த மூன்றாண்டுகளில் இணையத்தள மோசடி தொடர்பாக மொத்தம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் புகார்கள் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் டிசம்பர் 31 வரை இந்த மோசடி 230 கோடி ரூபாயாக இருந்தது என சில தகவல்களை மேற்கோள் காட்டி டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் கடந்த ஈராண்டுகளில் வங்கி அட்டைகள் மற்றும் இணைய வங்கிகள் மூலம் 318 கோடி ரூபாய் திருடப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.