டெல்லி வன்முறை: 2,647 பேர் கைது

டெல்லி வன்முறை: 2,647 பேர் கைது

2 mins read
094b4908-8fd4-47fc-8d2e-4071ed702321
டெல்லியின் பஜன்புரா பகுதியில் போராட்டக்காரர்கள் போலிசார் மீது தாக்குதல் நடத்தினர். இதையடுத்து தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போலிசார் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். படம்: ஏஎஃப்பி -

புதுடெல்லி: டெல்லியில் நடந்த வன்முறை தொடர்பாக 2,647 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

எழுநூறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும் 152 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறிய அவர், வன்முறையில் தொடர்புடைய யாரும் சட்டத்தின்பிடியில் இருந்து தப்பிக்க முடியாது என்றார்.

"வன்முறையில் ஈடுபட்டவர்கள் எந்த மதமாக, சாதியாக, அரசியல் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் விடமாட்டோம். அதேசமயம் எந்த ஓர் அப்பாவியும் தண்டிக்கப்பட மாட்டார்," என்று அவர் குறிப்பிட்டார்.

டெல்லி வன்முறையை உள்துறை அமைச்சரான அமித் ஷா கட்டுப்படுத்தத் தவறிவிட்டதால் அவர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்த நிலையில் எதிர்க்கட்சிகளுக்கு பதில் அளிக்கும் வகையில் புதன்கிழமை அன்று நாடாளுமன்றத்தில் அவர் பேசினார்.

"குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய வன்முறையை சதி திட்டம் இல்லாமல் நடத்தியிருக்க முடியாது. டெல்லி வன்முறையைத் தடுக்க போலிசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.

"ஆனால் வன்முறை மற்ற இடங்களிலும் பரவாமல் தடுத்து நிறுத்திய போலிசாரின் பணியை வெகுவாக பாராட்டுகிறேன்.

சுமார் 36 மணி நேரத்தில் வன்முறையை டெல்லி போலிசார் சிறப்பாக கட்டுப் படுத்தியுள்ளனர்.

வன்முறை நடந்த இடத்திற்கு நான் நேரில் செல்லவில்லை. எனக்குப் பாதுகாப்பு கொடுக்க போலிசார் வந்தால் அவர்களால் வன்முறையைக் கட்டுப்படுத்த இயலாமல் போய்விடும் என்பதால் போகவில்லை.

"அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்ற டெல்லி நிகழ்ச்சிகளிலும் நான் பங்கேற்கவில்லை. அந்த சமயத்தில் வன்முறையைக் கட்டுப்படுத்துமாறு டெல்லி போலிசாரை நேரில் வற்புறுத்துவதில் ஆர்வமாக இருந்தேன். இருப்பினும் எனது உத்தரவின்பேரில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வன்முறை நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்," என்றார் அவர்.

மேலும் பேசிய அமித் ஷா, டெல்லி வன்முறையில் 52 இந்தியர்கள் இறந்துவிட்டதாகவும் இவர்களில் இந்துக்கள் எத்தனை பேர், இஸ்லாமியர்கள் எத்தனை பேர் என்பதைப் பிரித்து கூற விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டார்.

டெல்லி வன்முறையில் 526 இந்தியர்கள் படுகாயம் அடைந்தனர். 371 இந்தியர்களின் வர்த்தக நிறுவனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. 142 இந்தியர்களின் வீடுகள் தீக்கிரையாகின.

ஆனால் அமித் ஷாவின் பதிலை ஏற்றுக்கொள்ளாத காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.