புதுடெல்லி: மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து 12 எம்எல்ஏக்களுடன் பிரிந்து சென்ற ஜோதிர் ஆதித்ய சிந்தியா நேற்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும் பாதுகாப்புத் துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங்கை சந்தித்தார்.
மரியாதை நிமித்தமாக இந்தச் சந்திப்பு நடைபெற்றது என்று தெரிவிக்கப்பட்டது.
மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியின் மிக முக்கிய முகமாக விளங்கிய ஜோதிர் ஆதித்ய சிந்தியா கட்சியில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி பாரதிய ஜனதாவில் இணைத்துக்கொண்டார்.
இவரது தலைமையில் காங்கிரஸ் கட்சியைச் சில எம்எல்ஏக்களும் விலகியிருப்பதால் மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமை யிலான ஆட்சி ஆட்டம் கண்டுள்ளது.
இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ள ஜோதிர் ஆதித்ய சிந்தியாவிற்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு மத்திய அமைச்சர் பதவியும் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தொடர்ந்து டெல்லியில் முகாமிட்டுள்ள ஜோதிர் ஆதித்ய சிந்தியா, பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும் பாதுகாப்புத்துறை அமைச்சருமான ராஜ்நாத்சிங்கை சந்தித்து பேசினார்.

