மும்பை: கொரோனா கிருமி அச்சம் காரணமாக கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி உட்பட உலக முழுவதும் பங்குச் சந்தைகள் ஆட்டம் கண்டுள்ளன.
இது, இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்து கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
இந்த நிலையில் மும்பை பங்குச்சந்தையில் நேற்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது, சென்செக்ஸ் 2000க்கும் அதிகமான புள்ளிகள் வரை சரிந்தது. இதேபோல் தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டியும் கடுமையாக வீழ்ச்சி கண்டது. பிற்பகலில் சென்செக்ஸ் 3100 புள்ளிகளுக்கும் மேல் சரிந்தது. இது, 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வீழ்ச்சியாகும். நிஃப்டி 9,600 புள்ளிகளுக்கு கீழே சென்றது.
வர்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் 2919 புள்ளிகள் சரிந்து, 32,778 புள்ளிகளில் நிலை பெற்றது. நிஃப்டி 868 புள்ளிகள் சரிந்து 9,590 என்ற அளவில் வர்த்தகம் நிறைவடைந்தது.
எச்டிஎப்சி, ரிலையன்ஸ், ஐசிஐசிஐ வங்கி, ஐடிசி உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக வீழ்ச்சி அடைந்தன.
பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட இந்த சரிவினால் முதலீட்டாளர் களுக்கு ஒரே நாளில் 11.42 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.

