வெளிநாட்டு சிறைகளில் 1,487 இந்தியர்கள்

வெளிநாட்டு சிறைகளில் 1,487 இந்தியர்கள்

1 mins read

புதுடெல்லி: வெளிநாடுகளில் உள்ள சிறைகளில் 1,487 இந்தியர்கள் அடைக்கப்பட்டுள்ளனர் என்று வெளியுறவு இணையமைச்சர் முரளீ தரன் தெரிவித்தார்.

புதன்கிழமை அன்று நாடாளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளித்த அவர், கடந்த ஜனவரி 31ஆம் தேதி நிலவரப்படி பங்ளாதேஷ், நேப்பாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இந்தியா்களின் எண்ணிக்கை 1,487 என்றார்.

"பாகிஸ்தானில் மட்டும் இந்திய மீனவா்கள் உள்பட 337 இந்தியக் கைதிகள் உள்ளனா்.

மேலும் மாயமான போர்க் கைதிகள் உள்பட இந்திய பாதுகாப்புப் படையினா் 83 போ் பாகிஸ்தானின் காவலில் இருப்பதாக நம்பப்படுகிறது," என்றார் அவர்.

ஆனால் அவா்கள் தங்களது காவலில் இல்லை என்று பாகிஸ்தான் கூறினாலும் இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தானிடம் தொடா்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

"இலங்கை சிறையில் இந்திய மீனவா்கள் உள்பட 107 இந்திய கைதிகள் உள்ளனா். பங்ளாதேஷ், நேப்பாளம் ஆகிய நாடுகளில் முறையே 157, 886 இந்திய கைதிகள் உள்ளனா்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த 2008-இல் கையெழுத்தான தூதரக ஒப்பந்தத்தின் அடிப்படையில் தங்களது சிறைகளில் உள்ள இந்தியா்களின் பட்டியலை ஆண்டுக்கு இரு முறை பாகிஸ்தான் வழங்குகிறது.

இதேபோல் இந்தியாவும் பாகிஸ்தான் கைதிகளின் பட்டியலை அந்நாட்டிடம் வழங்கி வருகிறது.