நகரி: கோழிக்கறி சாப்பிட்டால் கொரோனா கிருமி தாக்கும் என்னும் வதந்திகள் காரணமாக ஆந்திராவில் கோழிக்கறி விலை கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை வீழ்ச்சி அடைந்துவிட்டது.
அதற்கும் வாங்க ஆளில்லாத நிலையில் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள் கடுமையான நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கிருஷ்ணா மாவட்டம் மைலவரம் மண்டலம் கூலுகூரி வாரி கூடெம் என்னும் கிராமத்தில் கோழிப்பண்ணை அதிபர் குவ்வலகுமார் ரெட்டி சுமார் 2000 கோழிகளை அருகில் உள்ள கிராமத்திற்கு இலவசமாக வழங்க கொண்டு சென்றார்.
இலவசமாக கொடுத்தாலும் பெரும்பாலானவர்கள் கோழியை வாங்க மறுப்பதாக அவர் தெரிவித்தார். விலை வீழ்ச்சி மட்டுமின்றி விற்பனை குறைந்து விட்டதால் கோழிகளுக்கு போடும் தீனிக்கு கூட கட்டுப்படியாகாததால் இந்த முடிவுக்கு வந்ததாக கூறினார். இதனால் தனக்கு ஒரே வாரத்தில் ரூ.10 லட்சம் நஷ்டம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.
கேரளாவில் கொரோனா வைரஸ் பாதித்துள்ள நிலையில் தற்போது பறவை காய்ச்சலும் பரவி பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. கோழிக்கோட்டில் 2 கிராமங்களில் உள்ள பண்ணைகளில் பறவை காய்ச்சல் தென்பட்டது.
இதனையடுத்து 30 ஆயிரம் கறிக்கோழிகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனால் கறிக்கோழி விலை கடும்வீழ்ச்சியடைந்துள்ளது.
கேரளாவில் 10 நாட்களுக்கு முன்பு கோழிக்கறி கிலோ ரூ.120 முதல் ரூ.140 வரை விற்பனையானது. கொரோனா மற்றும் பறவை காய்ச்சல் எதிரொலியாக 3 கிலோ பிராய்லர் கோழி ரூ.100-க்கு கூவி, கூவி விற்பனை செய்யப்படுகிறது.
இருந்தாலும் கோழிக்கறியை வாங்க பெருபாலான மக்கள் முன் வரவில்லை. இதனால் கோழி இறைச்சி கடை வெறிச்சோடி காணப்படுகிறது. கோழி கழிவுகளை தின்னும் நாய்கள் ஆங்காங்கே சோர்வாக படுத்துகிடக்கின்றன. நாய்களுக்கு உடலில் புண் ஏற்பட்டு அவதிப்படுகின்றன.
இது தவிர கோழி கழிவுகள் மீன் பண்ணைகளுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன. கோழிக் கழிவுகள் கொட்டப்படும் மீன் பண்ணைகளில் மீன்கள் செத்து மிதக்கின்றன.
கடந்த வாரம் ரூ.5க்கு விற்ப னையான முட்டை நேற்று ரூ.3க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதனை வாங்ககூட பொதுமக்கள் முன்வரவில்லை. பெரும்பாலான கடைகளில் கோழி பிரியாணி ரத்து செய்யப்பட்டுள்ளது.

