அகில பாரத இந்து மஹாசபா என்ற அமைப்பின் தலைவர் சக்ரபாணி மகாராஜா (வலமிருந்து 2வது) மற்றும் பலர் 'பஞ்சகவ்யம்' என்று அழைக்கப்படும் பாரம்பரிய பானத்தைக் குடிக்கின்றனர்.
உலகமெங்கும் கரங்களை விரித்து கோரதாண்டவம் புரியும் கொரோனா கிருமித்தொற்றைத் தவிர்க்க அகில பாரத இந்து மஹாசபா என்ற அமைப்பு வித்தியாசமான ஏற்பாடு ஒன்றைச் செய்தது.
கோமியம், மாட்டுச் சாணம், பால், தயிர், நெய் ஆகிய ஐந்தும் கலந்த பஞ்சகவ்யம் எனும் பானத்தைப் பருகும் நிகழ்ச்சி ஒன்றுக்கு அது இன்றைய தினம் (மார்ச் 14) ஏற்பாடு செய்தது.
இந்தியாவில் பல பகுதிகளிலும் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டாலும் தலைநகர் டில்லியில் உள்ள அவ்வமைப்பின் தலைமையகத்தில் சுமார் 200 பேர் அந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அந்த நிகழ்வில் கொரோனா கிருமியைச் சித்திரிக்கும் சுவரொட்டி ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது. அந்த சுவரொட்டிக்கு பஞ்சகவ்யத்தை அங்கு கூடியிருந்தோர் ஊற்றியதைக் காட்டும் புகைப்படங்கள் வெளியாகின.
உலக அளவில் சுமார் 138,000 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தி, 5,000க்கும் மேற்பட்டோரைப் பலிகொண்ட கொரோனா கிருமித்தொற்று பரவலைத் தடுக்க இதுவரை உரிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டதற்கான அறிவியல் ரீதியான் ஆதாரங்கள் இல்லை.
#கோமியம் #கொரோனா #இந்தியா


