போபால்: மத்திய பிரதேச மாநில முதல்வர் கமல்நாத் இன்று அம்மாநில சட்டப்பேரவையில் தமது அரசுக்குள்ள பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முதல்வருமான கமல்நாத் தலைமையிலான அரசு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களக அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் மறைமுக மோதல் நிலவி வந்தது. குறிப்பாக ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பராகக் கருதப்படும் ஜோதிராதித்யா சிந்தியா தம்மை மாநில காங்கிரஸ் தலைமை புறக்கணிப்பதாக புகார் எழுப்பி வந்தார்.
முதல்வர் பதவியில் இருந்து கமல்நாத்தை நீக்கவேண்டும் என ஒருதரப்பு வலியுறுத்தியது. ஆனால், அகில இந்திய காங்கிரஸ் தலைமை இதற்கு செவிசாய்க்கவில்லை.
இதனால் கடும் அதிருப்தி அடைந்த ஜோதிராதித்யா சிந்தியா திடீரென காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாகத் தெரிவித்தார். இதையடுத்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 22 எம்எல்ஏக்கள் பதவி விலகுவதாக அம்மாநில ஆளுநர் லால்ஜி டாண்டனிடம் கடிதம் அளித்தனர்.
இதனால் முதல்வர் கமல்நாத் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. இதுபற்றி ஆளுநர் கவனத்துக்கு கொண்டு சென்ற பாஜக நிர்வாகிகள், முதல்வர் கமல்நாத் பெரும்பான்மையை இழந்துவிட்டதாக சுட்டிக் காட்டினர்.
இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார் என ஆளுநரை நேரில் சந்தித்து தெரிவித்துள்ளார் முதல்வர் கமல்நாத். இதையடுத்து திங்கட்கிழமையன்று சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரவேண்டும் என முதல்வர் கமல்நாத்துக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கான அறிவிப்பு சனிக்கிழமை நள்ளிரவு வெளியானது.
உத்தரப் பிரதசே சட்டப்பேரவையில் மொத்தம் 230 இடங்கள் உள்ளன.
இவற்றுள் 2 இடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில் இன்று ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவைக் கூட்டம் துவங்கும் என்றும் அதையடுத்து அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாஜகவினர் பெங்களுருவில் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக காங்கிரஸ் தரப்பு புகார் கூறுகிறது. ஆனால் பாஜகவினர் இதை மறுத்துள்ளனர்.
22 அதிருப்தி எம்எல்ஏக்களும் தனிப்பட்ட முறையில் தமக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக ஆளுநர் லால்ஜி டாண்டன் தெரிவித்துள்ளார்.

