மும்பை: சிறைக் கைதிகளிடமிருந்து மாதந்தோறும் சுமார் 6 கோடி ரூபாய் வரை மும்பை ஆர்தர் சாலை சிறை அதிகாரிகள் லஞ்சமாகப் பெறுவதாக புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக அச்சிறைச்சாலையில் உள்ள விசாரணைக் கைதி ஒருவர் மும்பை உயர் நீதிமன்றத்துக்கு புகார்க் கடிதம் அனுப்பி உள்ளார்.
கடந்த ஜனவரி மாதமே இப்புகார் கடிதத்துக்கு விளக்கமளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் மாநில அரசு இன்னும் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில் புகார் கடிதத்தில் உள்ள விவரங்கள் வெளியாகி உள்ளன.
"சிறையில் பல ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ள பழைய தண்டனைக் கைதிகள் சிறை அதிகாரிகளின் வேலையாட்களாகச் செயல்படுகின்றனர். புதிய கைதிகள் மிரட்டப்படுகிறார்கள்.
"மாதந்தோறும் 6 லட்சம் ரூபாய் செலவிட்டால் சிறையில் சகல வசதிகளுடன் இருக்கலாம் என புதிய கைதிகளிடம் கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்கும் கைதிகள் மட்டும் விதிகளை மீறி செய்யப்பட்டுள்ள வசதிகள் நிறைந்த சிறைப் பகுதிக்கு அனுப்பப்படுவார்கள்," என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஊடகத் தகவல் ஒன்று தெரிவிக்கிறது.
ஆர்தர் சாலை சிறையில் 3800க்கும் அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

