இந்தியாவில் கிருமித்தொற்று பலமடங்காகப் பெருகும் அபாயம்: நிபுணர்கள் எச்சரிக்கை

கொரோனா கிருமித்தொற்று பாதிப்பு அடுத்தபடியாக இந்தியாவில் பெருகும் வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருத்துரைத்துள்ளனர்.

கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த ஆசியாவின் மற்ற நாடுகளுக்குப் பலனளித்த நடவடிக்கைகள், உலகின் இரண்டாவது பெரிய மக்கள்தொகை நாடான இந்தியாவில் எடுபடாமல் போகும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.

கொரோனா கிருமித்தொற்றால் மூன்றாவது மரணத்தைப் பதிவுசெய்துள்ள இந்தியாவில் 125 கிருமித்தொற்று சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

நாட்டு எல்லைகளை மூடுவது, நாட்டுக்குள் நுழைவோரின் உடல்நிலயைச் சோதிப்பது, கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களைக் கண்டுபிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்தியா முடுக்கிவிட்டுள்ளது.

ஆனால், சுமார் 1.3 பில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட இந்தியாவில் இந்த நடவடிக்கைகள் மட்டும் கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்திவிடாது என்கின்றனர் சில நிபுணர்கள்.

பரிசோதனையைப் பலருக்கும் பரவலாக்குவது, சமூக இடைவெளியை அதிகரிப்பது போன்றவை மக்கள்தொகை அதிகமுள்ள, போதிய மருத்துவ வசதிகள் இல்லாத நாட்டில் சாத்தியமற்றது என்பது அவர்களது கருத்து.

தற்போது கிருமித்தொற்று பரவல் அங்கு மிதமாகவே இருந்தாலும் அடுத்த மாதம் 15ஆம் தேதிவாக்கில் அது பத்து மடங்குவரை உயரக்கூடும் என்று கிருமிகள் தொடர்பான விரிவான ஆய்வு மேற்கொள்ளும் மருத்துவ ஆய்வு நிலையத்துக்கான இந்திய மன்றத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் T.ஜேக்கப் கூறியுள்ளார்.

தமிழகத்தின் வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில் இருக்கு தேசிய எச்ஐவி / எய்ட்ஸ் ஆலோசனை நிலையத்தின் தலைவராகவும் போலியோ ஒழிப்பு தொடர்பான இந்திய அரசின் நிபுணத்துவ ஆலோசனைக் குழுவின் தலைவராகவும் அவர் இருந்து வருகிறார்.

“ஒவ்வொரு வாரம் கடக்கும்போது பாதிப்பு பல மடங்கு பெருகுகிறது,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த ஆன அனைத்தையும் செய்து வருவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்திய அளவில் அதிக எண்ணிக்கையிலான நகர்ப்புறங்களைக் கொண்டுள்ள மகாராஷ்டிராவில் இதுவரை 39 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் நிதித் தலைநகரான மும்பையும் இங்குதான் உள்ளது.

நேற்று முதல் அங்கு பல்கலைக்கழகத் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன. அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களில் பாதிப்பேர் வீட்டிலிருந்து பணி புரிவதற்கான தயார் நிலையில் வைப்பதற்கான நடவடிக்கைகள் அங்கு எடுக்கப்பட்டுள்ளன.

கிருமிப் பரவலில் மகாராஷ்டிரா இரண்டாவது காலகட்டத்தில் இருப்பதாக அம்மாநில சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப் கூறியுள்ளார்.

முறையான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றால் மாநிலம் கிருமிப்பரவலின் மூன்றாம் நிலைக்குச் சென்று, கிருமித்தொற்று பெருகிவிடும் என்றார் அவர்.

இந்தியாவில் சதுர கிலோமீட்டருக்கு சராசரியாக 420 பேர் வசிக்கின்றனர். பலர் சேரிகளிலும் குறைந்த வருமான வீடமைப்பு தொகுப்புகளிலும் நெரிசலான இடங்களில் வசிக்கின்றனர். ஒப்புநோக்க, சீனாவில் சதுர கிலோமீட்டருக்கு சராசரியாக 148 பேர் மட்டுமே வசிக்கின்றனர்.

இதனால், இந்தியாவில் சமூக இடைவெளி என்பது அனைவருக்கும் சாத்தியமில்லை.

அதேபோல, போதிய அளவுக்கு மருத்துவ வசதிகள் இல்லாத நிலையில், அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வதும் சிரமம். மாநில அரசின் அங்கீகாரம் பெற்ற தனியார் பரிசோதனைக் கூடங்களிலும் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்வது அனுமதிக்கப்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது.

உலக அளவில் சுமார் 174,000 பேரைப் பாதித்துள்ள இந்த கிருமித்தொற்றால் 7,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தொடக்கத்தில் மெதுவாகப் பரவும் கொரோனா கிருமித்தொற்று பின்னர் பெருமளவில் பெருகும் பாணி பொதுவாகக் காணப்படுகிறது.

தென்கொரியா, இத்தாலி ஆகிய நாடுகள் இத்தகைய பாணி பரவலால் பெரிதும் பாதிக்கப்பட்டது கண்கூடு.

இந்தியாவில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்ற வகையில் 5,200 பேர் அடையாளம் காணப்பட்டு கண்காணிக்கப்படுவதாக நேற்று (மார்ச் 16) சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இந்தியாவில் சுகாதாரப் பராமரிப்புக்காக செலவிடும் தொகை உலகிலேயே ஆகக் குறைந்தது என்று கூறப்படுகிரது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.7% மட்டுமே சுகாதாரத்துக்காக ஒதுக்கப்படுகிறது.

இதன் காரணமாக அரசு மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதும் வேளையில், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை கட்டுபடியாகக்கூடிய வகையில் இல்லை.

“கொரோனா கிருமித்தொற்றைக் கையாளுவதற்கான திறன் நமக்கு உள்ளதா என்பதை என்னால் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது,” என்று புதுடெல்லியில் இயங்கும் இந்தியாவின் பொதுச் சுகாதார அறநிறுவனம் ஒன்றின் தலைவரான டாக்டர் கே. ஸ்ரீநாத் ரெட்டி கூறிய நிலையில், “நம்மிடமிருக்கும் வளங்கள் அனுமதிக்கும் அளவுக்கு உத்திபூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன,” என்றார்.

#கொரோனா #இந்தியா

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!