ஓமானில் இருந்து கேரளாவுக்கு விமானத்தில் புறப்பட்ட ஷிஃபானாவுக்குத் தம் கணவரின் சடலம் அடங்கிய சவப்பெட்டியும் அதே விமானத்தில் எடுத்துவரப்படுவது தெரிந்திருக்கவில்லை.
கேரளாவின் கண்ணூர் மாவட்டம், சுழலி கிராமத்தைச் சேர்ந்தவர் முகம்மது சகீர், 30. கடந்த ஞாயிறன்று மஸ்கட்டில் நண்பர்களுடன் காற்பந்து விளையாடிக்கொண்டிருந்தபோது அவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதும் அவரது உயிரைக் காக்க முடியவில்லை. ஆயினும், சகீர் இறந்துவிட்ட தகவலை அவரின் நண்பர்கள் ஷிஃபானாவிடம் தெரிவிக்கவில்லை.
மாறாக, சகீரை கொரோனா கிருமி தொற்றிவிட்டதாகவும் அவரை மருத்துவமனையில் தனிமைப்படுத்தி வைத்துள்ளதாகவும் கூறினர்.
மருத்துவமனையில் எவரும் அவரைப் பார்க்க முடியாது என்பதால் ஷிஃபானா ஊர் திரும்புவது நல்லது என ஒருவழியாகச் சமாதானப்படுத்தி, மறுநாள் திங்கட்கிழமை அவரை கேரளாவுக்கு விமானத்தில் ஏற்றிவிட்டனர்.
மஸ்கட்டில் இருந்து கோழிக்கோடு சென்ற அந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்திலேயே சகீரின் சடலமும் ஏற்றி அனுப்பப்பட்டது. ஆனாலும், வீடு வந்து சேரும் வரை ஷிஃபானாவுக்கு சகீரின் மரணம் பற்றி தெரியாமல் பார்த்துக்கொண்டனர்.
சகீருக்கும் ஷிஃபானாவுக்கும் ஆறு மாதங்களுக்கு முன்னர்தான் திருமணம் நடந்தது. முதன்முறையாகக் கணவருடன் மஸ்கட் சென்ற ஷிஃபானா இப்போது மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
#ஓமான்


