கொவிட்-19: மலேசியாவில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்கள்; மீட்க ஏற்பாடு

1 mins read
6c07bc79-1349-47a1-a5bf-1a4fe80af53b
வெறிச்சோடிக் கிடக்கும் மலேசியாவின் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம். படம்: ராய்ட்டர்ஸ் -

கொரோனா கிருமித்தொற்று அச்சம் காரணமாக ஜரோப்பிய நாடுகள், சீனா, மலேசியா, பிலிப்பைன்ஸ், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து பயணிகள் இந்தியா வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

பிலிப்பீன்சில் ஏப்ரல் 14ஆம் தேதி வரை கல்வி நிறுவனங்களை மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளதால், அங்கு மருத்துவம் படித்துவரும் இந்திய மாணவ - மாணவிகள் 200 பேர் அங்கிருந்து வெளியேறி உள்ளனர்.

இந்தியா வருவதற்காக தமிழக மாணவர்கள் உள்பட இந்திய மாணவர்கள் அனைவரும் மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையம் வந்து சேர்ந்துள்ளனர்.

ஆனால் மலேசியாவில் இருந்து இந்தியாவுக்கு வருவதற்கான விமானச் சேவை இல்லாததால் மாணவர்கள் அனைவரும் அங்கு தவித்து வருகின்றனர்.

தங்களை தாயகத்துக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் கோலாலம்பூர் விமான நிலையத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கு உதவுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், "கோலாலம்பூர் விமான நிலையத்தில் காத்திருக்கும் இந்திய மாணவர்கள், பிற பயணிகளின் சிரமமான சூழ்நிலையைப் புரிந்துகொண்டுள்ளோம். உங்களுக்காக டெல்லி மற்றும் விசாகபட்டினத்தில் இருந்து ஏர் ஏசியா விமானங்கள் சேவை வழங்க இப்போது ஒப்புதல் அளித்துள்ளோம்," என்று பதிவிட்டுள்ளார்.

#இந்திய மாணவர்கள் #கொரோனா #மலேசியா

குறிப்புச் சொற்கள்