புதுடெல்லி: கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், கோவிட்-19 நோயால் பலியானோரின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.
மேலும் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 147 என்றும், இவர்களில் 25 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.
மகாராஷ்டிராவில் 41 பேர், கேரளாவில் 27 பேர், டெல்லி 10, உத்தர பிரதேசம் 16, அரியானா 14, கர்நாடகா 11, லடாக் 8, தெலுங்கானா 5, ஆந்திரா, ஒடிசா, உத்தரகாண்ட், பஞ்சாப் மாநிலங்களில் தலா ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
15 அம்ச கட்டுப்பாடு
இந்நிலையில் கொரோனா தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக 15 அம்ச கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது.
அதன்படி, நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்படுகின்றன. தனியார் நிறுவன ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணியாற்ற அறிவுறுத்தப் பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆன்மிக நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யக் கூடாது. மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ராணுவ வீரருக்கு பாதிப்பு
இதற்கிடையே, இந்தியாவில் முதல் முறையாக ராணுவ வீரர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
34 வயதான அந்த வீரர் ஜம்மு காஷ்மீரின் லே பகுதியில் உள்ள சுகாட் கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தைக்கு ஏற்கெனவே கொரோனா பாதிப்பு உள்ளது. மேலும் ராணுவ வீரரின் சகோதரி, மனைவி மற்றும் 2 குழந்தைகளும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
உத்தவ் தாக்கரே எச்சரிக்கை
மக்கள் அவசியம் இன்றிப் பயணங்கள் மேற்கொண்டால் மும்பையில் மின்சார ரயில், பேருந்துப் போக்குவரத்து நிறுத்தப்படும் என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே எச்சரித்துள்ளார்.
மாட்டுச் சாணத்துக்கு மவுசு
கொரோனா வைரஸ் தாக்கத்தால் மாட்டுச்சாணம், கோமியத்திற்கு மவுசு ஏற்பட்டுள்ளது. இவற்றைப் பயன்படுத்தினால் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம் என்று கூறப்படுவதை நம்பி, சிலர் ஒரு லிட்டர் கோமியம், ஒரு கிலோ சாணத்தை ரூ.500க்கு வாங்குகின்றனர்.
பிரதமர் வேண்டுகோள்
பாஜகவினர் அனைத்து அரசியல் நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து, கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த நேரத்தில் எந்தவித கருத்து வேறுபாடுகளையும் வெளிப்படுத்தாமல் அனைவரும் முழு ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
விமான நிலையங்களில் உள்ள மருத்துவர்கள், தாதியர்கள், சுகாதார ஊழியர்கள், பாதுகாப்புப் படையினர் அனைவருக்கும் பாராட்டு தெரிவித்துள்ள பிரதமர் மோடி, கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் ஊடகங்களின் பங்கும் பாராட்டுக்குரியது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இரு விமான நிறுவனங்கள் நடவடிக்கை
இதற்கிடையே, மலிவு விலை விமானச் சேவை வழங்கும் 'கோ ஏர்' கோவிட்-19 நோய் தாக்கத்தால் பெரும் வருமான இழப்பை எதிர்கொண்டுள்ளதை அடுத்து, ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்களை அந்நிறுவனம் பணிநீக்கம் செய்து வருகிறது. 'ஜெட் ஸ்டார்' இதே போல் நடவடிக்கை எடுத்துள்ளது.
காணொளித் திருமணம்
சவுதி அரேபியாவில் பணி புரிந்துவரும் தெலுங்கானாவைச் சேர்ந்த முகம்மது அத்னான் கான் என்பவருக்கு ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற இருந்தது.
ஆனால் கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியால் அவரால் நாடு திரும்ப முடியவில்லை. இதனால் காணொளி ஏற்பாட்டின் மூலம், திருமணச் சடங்குகள் முடிக்கப்பட்டன.
ரிசர்வ் வங்கி ஒதுக்கீடு
இதற்கிடையே கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகளை எதிர்கொள்ள ரிசர்வ் வங்கி ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் பணப்புழக்கம் சீரடையும் எனக் கருதப்படுகிறது. நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படும் விளைவுகளை சமாளிப்பதற்கான நடவடிக்கைகளையும் அவ்வங்கி மேற்கொண்டுள்ளது.

