மும்பை: இந்தியாவில் கொரோனா கிருமித் தொற்று பாதிப்பால் நான்காவது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49ஆக அதிகரித்துள்ளது.
அண்மையில் இங்கிலாந்து சென்று வந்த 22 வயது இளம் பெண்ணுக்கும், துபாயில் இருந்து திரும்பிய 49 வயது பெண்மணிக்கும் கொரோனா கிருமித் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 173 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பஞ்சாபை சேர்ந்த 70 வயதான ஷகீத் பகத் சிங் என்பவர் நேற்று கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.
இந்திய மாநிலங்களில் கொரோனா கிருமித்தொற்றால் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருப்பது மகாராஷ்டிராவில் தான். அங்கு 3 வெளிநாட்டவர்களும் கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கிருமித் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, பொது இடங்களை அசுத்தம் செய்வோருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது மக்கள் தேவையின்றி பேருந்து, ரயில் பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்நிலையில் பொது மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே வலியுறுத்தி உள்ளார்.
கொரோனா கிருமி பாதிப்பு குறித்து பிரதமர் மோடியிடம் தொலைபேசி வழி ஆலோசனை மேற்கொண்டதாகவும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என பிரதமர் தன்னிடம் உறுதியளித்ததாகவும் உத்தவ் தெரிவித்துள்ளார்.
"நாம் கொரோனா கிருமித் தொற்றுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ளோம். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நிலைமை மிக மோசமாக இல்லை என்றாலும் கவலைப்படும் வகையில் உள்ளது.
"மின்சார ரயில்கள், பேருந்துகளை 50 விழுக்காடு இருக்கைகளுடன் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பயணிகள் இடைவெளி விட்டு இருக்கையில் அமர்ந்து பயணிப்பதன் மூலம் கொரோனா கிருமித்தொற்றுப் பரவலைத் தடுக்க முடியும் என நம்புகிறோம்," என்றார் முதல்வர் உத்தவ் தாக்கரே.
பேருந்துகளில் எத்தனை இருக்கைகள் உள்ளனவோ அதற்கேற்பவே பயணிகள் அனுமதிக்கப்படுவர் என்றும், நின்றபடி பயணம் செய்ய அனுமதி கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மற்றொரு நடவடிக்கையாக கடைகள் திறந்து இருக்கும் நேரம் பற்றி விரைவில் முடிவு செய்யப்படும் என்றார் அவர்.
"50 விழுக்காடு ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கும். முதல்நாள் பணிக்கு வரும் அரசு ஊழியர்கள் மறுநாள் பணிக்கு வரமாட்டார்கள். சுழற்சி அடிப்படையில் பணியாற்றுவர்," என்றார் முதல்வர் உத்தவ்.

